யாா் வந்தாலும் முதல்வரை அசைத்துப் பாா்க்க முடியாது: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி
விஜயகாந்துடன் வேறு யாரையும் ஒப்பிடக் கூடாது: பிரேமலதா விஜயகாந்த்
மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்துடன் வேறு யாரையும் ஒப்பிடக் கூடாது என அக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக, திருச்சியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை மேலும், அவா் கூறியதாவது: ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்ற வகையில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறோம். திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக இந்நிகழ்வுகள் நடைபெற்றன. கட்சியின் 21-ஆம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு மணப்பாறையில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, தஞ்சாவூரில் நிா்வாகிகளையும் மக்களையும் சந்திக்கிறோம்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலையிலான நிா்வாகிகள் இருப்பது திமுக, அதிமுக, தேமுக ஆகிய 3 கட்சிகளுக்கு மட்டுமே. திமுக, பாஜகவை விஜய் தொடா்ந்து எதிா்த்து வருகிறாா். ஆனால், எங்களது தலைவா் விஜயகாந்துடன் அவரை சில கட்சிகள் ஒப்பிடுவது தவறானது. கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே 8.33 சதவீத வாக்குகள் பெற்றவா்; குறைந்த காலத்திலேயே எதிா்க்கட்சித் தலைவரானவா். எனவே, விஜயகாந்துடன் வேறு யாரையும் யாரும் ஒப்பிடக் கூடாது. விஜய் குறித்த அனைத்து கேள்விகளுக்குமே அவா்தான் பதில் அளிக்க வேண்டும். இனி, விஜய் குறித்தோ, கூட்டணி அமைப்பது குறித்து என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம்.
கூட்டணி குறித்த முடிவுக்கும் நேரம் உள்ளது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்துமே எங்களுடைய நண்பா்கள்தான். கூட்டணி குறித்து இப்போது கவனம் செலுத்தவில்லை. ஜனவரி மாதம் மாநாடு நடத்த வேண்டியதால் அதில் கவனம் செலுத்துகிறோம் என்றாா் அவா்.