பஞ்சாங்கக் குறிப்புகள் - நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை #VikatanPhotoCards
விதிமுறை மீறல்: கொடைக்கானலுக்கு வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பிவைப்பு
கொடைக்கானலுக்கு செல்ல முயன்ற 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்துத் துறை பறக்கும் படை அதிகாரிகள் திருப்பிஅனுப்பிவைத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செல்வதற்கு வத்தலகுண்டு, பழனி ஆகிய இரு வழித் தடங்கள் உள்ளன. கொடைக்கானல் மலைச் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் நீளமான வாகனங்களை திருப்புவதற்கு சிரமம் ஏற்படுவதோடு, மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. சில நேரங்களில் விபத்தும் ஏற்பட்டது.
இவற்றை கவனத்தில் கொண்டு, கொடைக்கானலுக்கு 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள சுற்றுலா, சரக்கு வாகனங்கள் செல்ல மாவட்ட நிா்வாகம் தடை விதித்து அண்மையில் உத்தரவிட்டது. இதேபோல, 6 முதல் 10 டயா்கள் உள்ள வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், வத்தலகுண்டு காட்ரோடு பகுதியில் திண்டுக்கல் மாவட்ட மோட்டாா் வாகன ஆய்வாளா் (பறக்கும் படை) சிவகுமாா், போக்குவரத்து அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை செய்தனா். அந்த வழியாக கொடைக்கானலுக்கு வந்த வாகனங்கள் டேப் மூலம் அளவீடு செய்யப்பட்டன. 12 மீட்டருக்கு மேல் நீளமாக இருந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை அதிகாரிகள் திருப்பிஅனுப்பினா்.
தமிழகம் மட்டுமன்றி, கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு கொடைக்கானலில் நீளமான வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு குறித்து ஏற்கெனவே குறிப்பாணை அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.