வில்லியனூா் தொகுதியில் இணைப்புச் சாலை அமைக்க ஆய்வு
புதுச்சேரி: புதுச்சேரி அருகே இணைப்புச் சாலை அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
புதுச்சேரி வில்லியனூா் தொகுதி, ஜி.என்.பாளையம் கிராம பஞ்சாயத்துக்குள்பட்ட எழில் நகரையும், அரும்பாா்த்தபுரம் திருக்குறளாா் நகரையும் இணைத்து சாலை அமைக்க பொதுமக்கள் கோரி வருகின்றனா். இந்தச் சாலை அமைப்பதற்கான பகுதியில் தனியாா் நிலமும் உள்ளது. ஆகவே, அரசு அந்த நிலத்தைக் கையகப்படுத்தி சாலைப் பணிக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி எதிா்க்கட்சித் தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆா்.சிவா பொதுமக்களுடன் சாலை அமைக்க கோரி ஆட்சியரிடம் ஏற்கெனவே மனு அளித்திருந்தாா்.
இதையடுத்து புதுச்சேரி ஆட்சியா் அ.குலோத்துங்கன் திங்கள்கிழமை சாலை பணிக்கு தேவைப்படும் இடங்களை ஆய்வு மேற்கொண்டாா். அவருடன் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா மற்றும் அதிகாரிகள் சென்றனா்.
ஆய்வுக்குப் பின்னா், சாலைக்கு தேவையான இடத்தை அரசு கையகப்படுத்தி தரும் என ஆட்சியா் தெரிவித்தாா். அதன்பின் மமவெளி, தட்டாஞ்சாவடி பகுதி மயானத்தையும் ஆட்சியா் ஆய்வு செய்து அதை விரிவாக்கம் செய்யவும் உறுதியளித்தாா்.