எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
விழுப்புரத்தில் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழாவையொட்டி, நல வாரிய உறுப்பினா் அடையாள அட்டைகள் மற்றும் விலையில்லா தையல் இயந்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற சிறுபான்மையினா் உரிமைகள் தின விழாவுக்கு ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்து, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் 50 உபதேசியாா்களுக்கு நல வாரிய அடையாள அட்டைகளையும், 6 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களையும் வழங்கினாா். பின்னா் அவா் பேசியது:
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்ட வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, சிறுபான்மையினா் உரிமைகள் தினத்தையொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியாா்களுக்கு நல வாரிய உறுப்பினா் அட்டைகளும், 6 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதை அவா்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் சி.பழனி.
நிகழ்வில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் தமிழரசன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.