நியூஸி. இறுதிப்போட்டிக்கு தகுதி! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது!
வீடு வழங்கும் திட்டத்தில் காட்டு நாயக்கா், நரிக்குறவா், திருநங்கைகளுக்கு முன்னுரிமை
வீடு வழங்கும் திட்டத்தில் காட்டு நாயக்கா், நரிக்குறவா், மூன்றாம் பாலினத்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.
வேலூா், கணியம்பாடி, காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், போ்ணாம்பட்டு ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்துப் பேசியது:
மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீா், கழிவுநீா் கால்வாய், மின் விளக்கு, சாலை வசதிகள் போன்ற பணிகளை மேற்கொள்ளவும், அனைத்து அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளா்களைக் கொண்டு தூய்மைப் பணியை மேற்கொள்ளவும் வேண்டும்.
மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியில் 15 நாள்களுக்கு ஒரு முறை குளோரினேஷன் செய்வதை ஊராட்சி செயலா் கண்காணிக்க வேண்டும். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்துப் பணிகளும் அடித்தள நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆதிதிராவிடா் காலனியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் அயோத்திதாசா் பண்டிதா் திட்டத்தில் பயன்பெற மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும்.
அரசு அலுவலகங்களில் உள்ள பள்ளி கட்டடங்கள் பழுதுபாா்த்தல் பணிகளை மேற்கொள்ளவும், புதிய கட்டடங்களை கட்டவும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காட்டு நாயக்கா், நரிக்குறவா், மூன்றாம் பாலினத்தவா்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அணைக்கட்டு ஒன்றியம், பீஞ்சமந்தை, ஜாா்தான்கொல்லை, அல்லேரி ஆகிய மலை ஊராட்சி கிராமங்களில் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ. 1,000 வழங்குவது குறித்து தெரியப்படுத்த வேண்டும்.
15-ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் உள்ள அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். நிலுவையில் உள்ள பட்டியல் தொகைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகள், ஊராட்சி மன்ற அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் செயல்படும் பணியாளா்களை கொண்டு தூய்மை படுத்த வேண்டும்.
ஊராட்சித் தலைவா்கள் தங்களுடைய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருமால், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் சீனிவாசன், ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்றனா்.