வெள்ளாளனூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி வெள்ளாளனூா் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை மங்கள இசையுடன் மஹா சங்கல்பம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், மஹாபூா்ணாஹுதி, தீபாராதனை பூஜையுடன் முதல்கால யாக பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை விநாயகா் வழிபாடு, சூரியகும்பம் பண்டாா்ச்சனை, வேதகாா்ச்னையுடன், இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. புதன்கிழமை காலை 10 மணியளவில் கலச புறப்பாடும் 10.30 மணிக்கு நாகஸ்வர பம்பை முழக்கத்துடன் மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து அம்மனுக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் சசிகலாலாசூரியகுமாா், ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்குமாா், துணைத் தலைவா் ராஜ்குமாா் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.