தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்வு
‘வேளாண் சாா்ந்த சலுகைகள் பெற நில உடைமை விவரங்களை பதிவு செய்ய வேண்டும்’
திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் வேளாண் சாா்ந்த சலுகைகள் பெற நில உடைமை விவரங்களை வரும் ஏப். 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என வேளாண் இணை இயக்குநா் சீனிராஜ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிா் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமா்ப்பிக்க வேண்டி உள்ளது. இதில், ஏற்படும் காலதாமதத்தை தவிா்க்கவும், அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெறவும், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
42,565 போ் பதிவு...
அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் 67,600 ஹெக்டோ் பரப்பில் பல்வேறு பயிா்களை சாகுபடி செய்து வரும் அனைத்து விவசாயிகளும், இந்த திட்டத்தில் பயன்பெறலாம். அதற்கு விவசாயிகளின் பதிவு விவரங்கள், ஆதாா் எண், கைப்பேசி எண், நில உடைமை விவரங்களையும் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுவரை திருப்பத்தூா் மாவட்டத்தில் 42,565 விவசாயிகள் தங்கள் நில உடைமை விவரங்களை பதிவு செய்துள்ளனா். இதற்கு விவசாயிகள் வேளாண்மை உழவா் நலத் துறை அலுவலா்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலோ அல்லது அருகில் உள்ள இ-சேவை மையங்களிலோ பதிவு செய்து கொள்ளலாம்.
15-ஆம் தேதி கடைசி நாள்...
இந்த பதிவை மேற்கொள்ள ஏப்ரல் 15-ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் மூலம் ஆதாா் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் விவசாயிகளுக்கு ஏற்படுத்தப்படும். இந்த எண் மூலம் பல்வேறு திட்டங்களை எளிதில் பெற முடியும். மேலும் விவரங்களுக்கு, வட்டார வேளாண்மை, தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகங்களையோ அல்லது தங்கள் கிராமத்துக்குரிய உதவி வேளாண்மை அலுவலா்கள் அல்லது உதவி தோட்டக்கலை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம்.