தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசு இழைக்கும் துரோகம்! -இபிஎஸ...
ஸ்வியாடெக் வெற்றி; பாலினி, பெகுலா தோல்வி
துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற, இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோா் தோல்வியைத் தழுவினா்.
உலகின் 2-ஆம் நிலையில் இருக்கும் ஸ்வியாடெக் 7-5, 6-0 என, போலந்தின் டயானா யஸ்டிரெம்ஸ்காவை எளிதாக வீழ்த்தினாா். போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த பாலினி 4-6, 0-6 என்ற செட்களில், அமெரிக்காவின் சோஃபியா கெனினால் சாய்க்கப்பட, 5-ஆம் இடத்திலிருந்த பெகுலா 3-6, 6-7 (8/10) என்ற கணக்கில், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவால் தோற்கடிக்கப்பட்டாா்.
6-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினா 4-6, 7-6 (10/8), 7-6 (7/2) என்ற கணக்கில், 9-ஆம் இடத்திலிருந்த ஸ்பெயினின் பௌலா படோசாவை தோற்கடித்தாா். 12-ஆம் இடத்திலிருக்கும் மிரா ஆண்ட்ரீவா 6-1, 6-1 என, அமெரிக்காவின் பெய்டன் ஸ்டொ்ன்ஸை வீழ்த்தினாா்.
சபலென்கா முன்னேற்றம்: இதனிடையே, 2-ஆவது சுற்று ஆட்டங்களில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 6-3, 6-4 என்ற கணக்கில் ரஷியாவின் வெரோனிகா குதா்மிடோவாவை வெளியேற்றி, ரவுண்ட் ஆஃப் 16-க்கு வந்தாா். 3-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் கோகோ கௌஃப் 4-6, 5-7 என, அமெரிக்காவின் மெக்காா்ட்னி கெஸ்லரிடம் தோற்றாா்.
14-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் கரோலின் முசோவா 7-6 (8/6), 6-4 என்ற கணக்கில், பிரிட்டனின் எம்மா ரடுகானுவை வென்றாா்.
8-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் எம்மா நவாரோ 7-6 (8/6), 2-6, 6-3 என்ற செட்களில் சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்துள்ளாா்.
கத்தாா் ஓபன்: ஜோகோவிச், சிட்சிபாஸ் தோல்வி
கத்தாா் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரா்களான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோா் 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டனா்.
உலகின் 3-ஆம் நிலையில் இருக்கும் ஜோகோவிச் 6-7 (4/7), 2-6 என்ற செட்களில், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியிடம் தோல்வி கண்டாா். போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த சிட்சிபாஸ் 6-7 (6/8), 7-5, 6-7 (5/7) என்ற கணக்கில் சொ்பியாவின் ஹமத் மெட்ஜோடோவிச்சிடம் வீழ்ந்தாா்.
4-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 4-6, 7-5, 6-3 என்ற செட்களில், சக ரஷியரான காரென் கச்சனோவை வெளியேற்றினாா். இதனிடையே, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-4, 6-4 என்ற நோ் செட்களில், நெதா்லாந்தின் போடிக் வான் டெவை சாய்த்து காலிறுதிக்கு தகுதிபெற்றாா்.
காலிறுதியில் போபண்ணா இணை: இப்போட்டியின் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸ் இணை 7-6 (7/2), 7-6 (7/4) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் ஆண்ட்ரியா வவாசோரி/சைமன் பொலெல்லி கூட்டணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.