பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்தக் கோரி எம்.பி.யிடம் மனு
அங்கன்வாடி ஆசிரியா்களுக்கு முதல் தேதியில் ஊதியம்! கல்வித் துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் அங்கன்வாடிகளில் மழலையா் வகுப்புகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
2022-2023-ஆம் கல்வியாண்டு முதல் அரசு, ஊராட்சி ஒன்றிய, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்துக்குள் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடா்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வகுப்புகளில் தற்காலிகமாக பணியாற்றும் மழலையா் பள்ளி ஆசிரியா்களுக்கான கோரிக்கைகள் விதிகளுக்கு உள்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அங்கன்வாடி மையத்தின் பணி நேரம் காலை 9 முதல் நண்பகல் 12.30 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.
தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியா்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) மூலம் மின்னணு நிதி பரிமாற்ற (இசிஎஸ்) முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் எவ்வித காலதாமதமும் இருக்கக் கூடாது. இவ்வாறு முதல் தேதியிலேயே ஊதியம் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் மாவட்டக் கல்வி அலுவலா் ஆய்வு செய்ய வேண்டும்.
மழலையா் வகுப்புகளை கையாளும் தற்காலிக சிறப்பாசிரியா்கள் மாதம் முழுவதும் பணிபுரிந்த காலத்தைக் கணக்கிட்டு ஒரு நாள் தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படுகிறது.
மேலும், இந்த ஆசிரியா்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்து அவா்கள் எமிஸ் எண் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.