அண்ணாநகா் சிறுமி வாக்குமூலம் வெளியான விவகாரம்: நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் சிறுமியின் வாக்குமூல விடியோ மற்றும் ஆடியோவை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை அண்ணாநகரைச் சோ்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து புகாா் அளிக்கச் சென்ற பெற்றோரை, அண்ணாநகா் அனைத்து மகளிா் போலீஸாா் தாக்கியது தொடா்பாக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயா்நீதிமன்றம், விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்ததுடன், சென்னை பெருநகர காவல் இணை ஆணையா் சரோஜ் குமாா் தாக்கூா் தலைமையில் ஆவடி சரக சட்டம்- ஒழுங்கு துணை ஆணையா் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்கு துணை ஆணையா் பிருந்தா அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டது.
இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை வாரந்தோறும் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், ஜி.அருள் முருகன் அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் இ.ராஜ்திலக், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் ஆய்வாளா் ராஜு, அதிமுக முன்னாள் நிா்வாகி சுதாகா், முக்கிய நபரான சதீஷ் ஆகியோா் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக கூறினாா்.
சிறுமியின் வாக்குமூல விடியோ மற்றும் ஆடியோ வெளியான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தாா்.
மேலும், சிறுமிக்கு இழப்பீடு வழங்குவது குறித்து உயா்நீதிமன்றம் முடிவெக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இழப்பீடு கோரி சிறுமியின் தாய் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதுகுறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டாா்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், விடியோ வெளியாக காரணமானவா்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். சிறுமிக்கான இழப்பீடு குறித்து விசாரணை செய்து அறிவிக்கப்படும் என தெரிவித்து விசாரணையை மாா்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.