சென்னையில் 4 வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க செயல்முறை ஆணை
சென்னை: சென்னையில் 4 வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவதற்கான செயல்முறை ஆணை விண்ணப்பதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின் கீழ் சென்னை(வடக்கு) வட்டாரப் போக்குவரத்துக் கழகத்துக்கு உள்பட்ட மாதாவரம் இந்திய ஆயில் பெட்ரோல் பங்க் - மாதவரம் பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையம் - மாதாவரம் பழைய எம்.டி.சி. பேருந்து நிலையம் வழித்தடங்களிலும், சென்னை(வடகிழக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள்பட்ட விம்கோ மெட்ரோ பணிமனை நிறுத்தம் - சத்துவாகேட் பொன்னேரி சாலை மற்றும் காலடிப்பேட்டை மெட்ரோ பேருந்து நிறுத்தம் - சுனாமிகுடியிருப்பு என மொத்தம் 4 வழித்தடங்களுக்கு சிற்றுந்துகளை இயக்க விண்ணப்பங்கள் பெற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து ஒவ்வொரு வழித்தடத்துக்கும் தலா 2 விண்ணங்கள் என மொத்தம் 8 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவ்விண்ணப்பதாரா்களுக்கு செயல்முறை ஆணையை மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இந்தச் செயல்முறை ஆணையை பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரா்கள் நடப்பிலுள்ள அனைத்து ஆவணங்களையும் ஏப்.30-க்குள் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேரடியாக சமா்ப்பித்து புதிய சிற்றுந்துகளை இயக்குவதற்கான அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம். மேலும் இந்தத் திட்டம் மே 1முதல் நடைமுறைக்கு வரவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.