அண்ணா பல்கலை. மாணவி பாலியல் புகாரில் ஒருவர் கைது! மாணவர்கள் போராட்டம்!
மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு, இருவரும் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு அடையாளம் தெரியாத இருவர் வந்து, மாணவரைத் தாக்கிவிட்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | கஜகஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து தீப்பற்றியது! 42 பேர் பலி
இதையடுத்து மாணவி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை: தனிப்படைகள் அமைப்பு!
தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக வாசலில் மாணவர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நடுநிலையான விசாரணை வேண்டும் என்று கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவி பாலியல் புகார் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நிர்வாகம் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் பதிவாளர் பிரகாஷ் கூறியுள்ளார்.