அண்ணா பல்கலை. போராட்டம்: போக்குவரத்து மாற்றம்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக பிரதான வாயில் முன்பு நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக கிண்டி சாலையில் இன்று(டிச. 26) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடா்பாக போலீஸாா், தொடா்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். அதேவேளையில் இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பல்கலைக்கழக வளாக பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அண்ணா பல்கலைக்கழக நிா்வாகத்தை பெருநகர காவல் துறை அறிவுறுத்தியது.
இதையும் படிக்க: தட்கல் நேரத்தில் செயலிழந்த ஐஆர்சிடிசி தளம்! பயனர்கள் ஆவேசம்!
இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளா் பிரகாஷ் தெரிவித்தார்.
இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக பிரதான வாயில் முன்பு நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தால் கிண்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், "அண்ணா பல்கலைக்கழக தலைமை வாயில் முன்பு நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக லிட்டில் மவுண்டில் வாகனங்கள் சைதாப்பேட்டை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது. அதற்கேற்ப உங்கள் வழிகளைத் திட்டமிடவும்!" என்று குறிப்பிட்டுள்ளது.