வெள்ள நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்: பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் கைது
சிதம்பரம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, காட்டுமன்னார்கோவிலில் தடையை மீறி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 175 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
பலத்த மழை மற்றும் வீராணம் ஏரி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, காட்டுமன்னாா்கோவில் சீரணி அரங்கில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பகுதியில் டிசம்பர் 12 ஆம் தேதி பெய்த பலத்த மழை மற்றும் வீராணம் ஏரி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு செயற்கைக்கோள் படத்தை அடிப்படையாகக் கொண்டு பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும். நிவாரண நிதியாக ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி. ஆர். பாண்டியன் பேசினார்.
இதையும் படிக்க |தகைசால் தமிழரே, தமிழ்நாடே உங்களை வாழ்த்துகிறது! - முதல்வர் மு.க. ஸ்டாலின்
காவல்துறையினர் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன், கடலூர் மாவட்ட செயலாளர் ஆர். ராமச்சந்திரன், கௌரவத் தலைவர் எல். பி. லட்சுமி காந்தன், கடலூர் மாவட்ட துணை தலைவர் எம் அன்பழகன், ஒருங்கிணைப்பாளர் கே சுரேஷ் குமார் உள்ளிட்ட விவசாயிகள் 175 பேர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கோரிக்கை மனுவை வட்டாட்சியர் சிவக்குமாரிடம் விவசாயிகள் அளித்தனர்.
காட்டுமன்னார்கோவில் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள்.