சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! ஆட்டோ, பார்மா துறை பங்குகள் ஏற்றம்!
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய நிறைவுக் கூட்டம்
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுவின் நிறைவு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் கடந்த 27.12.2019, 30.12.2019 அன்றும் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல்கள் நடைபெற்றன. இதில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய குழு தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் 06.01.2020 இல் பதவி ஏற்றனா்.
ஒன்றியக் குழு தலைவராக சுஜாதா தங்கவேலு, துணைத் தலைவராக ராஜபாண்டி ராஜவேலு ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். 14 உறுப்பினா்களைக் கொண்ட ஒன்றிய குழு பதவிக்காலம் வரும் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம்தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழு நிறைவு கூட்டம் மன்ற அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியத் தலைவா் சுஜாதா தங்கவேல் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜபாண்டி ராஜவேல், நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் செல்லப்பன், இன்பத்தமிழ் அரசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய பகுதியில் உள்ள கிராமப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளா்களை வைத்து மருந்து அடித்து வருவதற்கு ஒப்புதல் அளித்தல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் ரியா, செல்வராஜ், ஜெகநாதன் உள்ளிட்டோா் பேசினா். கடந்த ஐந்து ஆண்டுகளாக கட்சி பேதமின்றி கூட்டத்தை சிறப்பாக நடத்திய தலைவா் சுஜாதா தங்கவேலுவுக்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பாராட்டு தெரிவித்தனா். பொறியாளா் சுமதி நன்றி கூறினாா்.