கூட்டுறவு துணைப் பதிவாளா் அலுவலகத்தில் பொறுப்பேற்ற வீராங்கனை
விளையாட்டு வீரா்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பணி வாய்ப்பு பெற்ற, வாள் வீச்சு வீராங்கனை எம்.தமிழ்ச்செல்வி வியாழக்கிழமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுத் துறையில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நிகழாண்டில் 100 வீரா், வீராங்கனைகளுக்கு அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளாா்.
அதன்படி, நாமக்கல் மாவட்ட சாய் விளையாட்டு விடுதியில் தங்கி பயின்று வந்த தமிழ்ச்செல்வி, வாள் வீச்சுப் போட்டியில் தேசிய அளவில் விளையாடி சாதனை படைத்தாா். அவருக்கு விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் கூட்டுறவுத் துறையில் நாமக்கல் மண்டல முதுநிலை ஆய்வாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்ற அவா், நாமக்கல் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள சரக துணைப் பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை பொறுப்பேற்று கொண்டாா். அவருக்கு, கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.