பேருந்துக்காக சாலையில் காத்திருந்த கா்ப்பிணி; காரில் அழைத்துச் சென்று வீட்டில் வ...
``பெரியாரை உலகமயமாக்குவோம்; உலகத்தை பெரியார்மயமாக்குவோம்" - 3D -யில் பெரியாரை உருவாக்கிய சுஜித்
இந்தாண்டு ஜூலை மாதம் `Periyar Vision' என்ற ஓ.டி.டி தளத்தை திராவிடர் கழகம் தொடங்கியிருந்தது.
அந்த ஓ.டி.டி தளத்தில் பெரியாரின் கருத்துகள் கொண்ட குறும்படங்கள், படங்கள், ஆவணப்படங்கள் எனப் பல விஷயங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்த ஓ.டி.டி தளத்தின் யூ-டியூப் பக்கத்தில் பெரியார் குறித்தான ஒரு 3டி அனிமேடட் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். நேர்த்தியான தொழில்நுட்ப வேலைகளை பின்பற்றியதோடு பெரியாரின் கருத்துக்கள் உலகத்தின் அனைத்து இடங்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் அந்தக் காணொளியை விரித்திருக்கிறார்கள். பெரியாரின் சிந்தனைகளை அனிமேடட் காணொளி கொண்டு எளிமையான வகையில் பலருக்கும் எடுத்துரைத்த விதம் பாராட்டதக்கது. இந்தக் காணொளியை `Point S' என்ற நிறுவனம் தயார் செய்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனரான சுஜித் மற்றும் நிஷித் சிந்தனை வடிவில் இருந்த விஷயங்களை செயல் வடிவில் சாத்தியப்படுத்தியும் காட்டியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக நம்மிடையே பேசிய `Point S' நிறுவனர் சுஜித், `` பெரியார் விஷன் ஓ.டி.டி தளத்தில் ஏற்கெனவே பெரியாரின் புத்தகங்கள், அவரின் படங்கள் என அவரைப் பற்றிய பல விஷயங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இப்போது பெரியார் தொடர்பாக ஒரு 3டி வீடியோ செய்திருக்கிறோம். இந்த 3டி காணொளிக்காக 3 மூன்று மாதங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்த வீடியோ ஜனரஞ்சகமாக அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் யூ-டியூபில் பதிவிட்டிருக்கிறோம். ஒரு விஷயத்தை காணொளியாகச் செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஒரு ஆல்பம் வீடியோ பாடலாக செய்தாலும் அது ஒரு கட்டத்திற்குதான் சென்று சேரும். தமிழ்நாட்டைத் தாண்டி வேறு பகுதிகளுக்குச் சென்றுசேராது. அந்த சமயத்தில்தான் அனிமேஷன் காணொளி குறித்த ஐடியா எங்களுக்கு வந்தது.
அதன் பிறகு 2டி-யில் பண்ணலாமா அல்லது 3டி-யில் பண்ணலாமா என யோசனை வந்தது. 2டி என்றால் வரைப்படங்களை வைத்து அனிமேட் செய்ய வேண்டிய வேலைதான். அதன் பிறகு 3டி-யில் காணொளியைத் தயார் செய்யலாம் என முடிவு செய்தோம். 3-டியில் காட்சிப்படுத்துவது கொஞ்சம் சவலான ஒன்றுதான். பெரியாரை 3டி-யில் காட்சிப்படுத்த ஒரு தனி குழுவாகச் செயல்பட்டோம். தொழில்நுட்பத்தின் நுணுக்கங்களைப் பின்பற்றி பல சவால்களுக்குப் பிறகு இந்த காணொளியின் முக்கிய பகுதியை முடித்துவிட்டோம். பின்னணி குரல் கொடுத்து வீடியோவை விரிவுப்படுத்தினால் அது மக்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்திவிடும்.
அதனால்தான் 100 விநாடிகளுக்கு காணொளியை முடித்து சுவாரஸ்யமாக்கிட திட்டமிட்டோம். பெண்ணடிமை, சுயமரியாதை, சமூக நீதி எனப் பெரியாரின் அடிப்படைத் தத்துவங்களை எடுத்துக்கொண்டு இந்தக் காணொளியை காட்சிகளாக விரித்தோம். காணொளியில் ஒரு காட்சியில் தமிழக வரைப்படத்தில் படுத்திருக்கும் ஒரு பெண்ணின் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பதாக காட்சிப்படுத்தியிருந்தோம். பிறகு, பெரியாரின் தடியை ஆயுதமாகக் கையில் எடுத்தோம். அந்தத் தடி இரும்பையும் உடைக்கும் அளவுக்கு வலிமையானதாகக் காட்சிப்படுத்தினோம். இதுமட்டுமல்ல, ஒரு காட்சியில் பெரியாரின் தடி ஒருவரின் தலையை நிமிர வைக்கும். இதற்கிடையில் பெரியாரின் முன்னோட்டங்களை ஜம்ப் கட்ஸாக சேர்த்தோம்.
இறுதியில் மக்களுக்கு பகுத்தறிவின் ஒளியாக பெரியார் இருப்பதாகக் காட்சிப்படுத்தியிருந்தோம். இந்தக் காட்சிகளைக் காணொளியாக விரித்து நகர்த்திட ஒரு பாடல் தேவைப்பட்டது. `தகர்த்திடு, வென்றிடு...தெளிந்திடு நிமிர்ந்திடு' என்பது போன்ற இரு வார்த்தை சொற்களைக் கொண்டு ஒரு 100 நொடிகளுக்கு ஒரு பாடலாக விரித்தோம். இறுதியில் பெரியார் என்ற பெயரை தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் குறிப்பிட்டோம். அது உலகளவில் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே பெயரை அங்கிலத்தில் குறிப்பிட்டோம். `பெரியாரை உலகமயமாக்குவோம். உலகத்தை பெரியார்மயமாக்குவோம்!' என்பதுதான் இந்தக் காணொளிக்கு முதல் முக்கியமான காரணம்." என அழுத்தமாகச் சொன்னவர், `` நான் இந்த துறையில் 2001-ம் ஆண்டு முதல் இருக்கிறேன். இந்த காணொளிக்காக உழைத்த அனைவருக்கும் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் கூறி முடித்துக் கொண்டார்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...