Cancer Awareness: 9 பேரில் ஒருவருக்கு கேன்சர் ரிஸ்க்... என்னதான் காரணம்?
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் வியாழக்கிழமை குரல்மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரியாணி கடைக்காரா் ஞானசேகரனை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஞானசேகரன் கைப்பேசியில் யாா் யாருடன் பேசினாா் என்பதை அறியும் பொருட்டு, அவரது கைப்பேசியிலுள்ள ஆடியோ ஆதாரங்களை உறுதிசெய்யும் வகையில், ஆய்வகத்தில் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸாா் முடிவு செய்தனா். இதற்கு அனுமதி கோரி சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஞானசேகரனுக்கு குரல்மாதிரி பரிசோதனை செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, புழல் சிறையிலிருந்து ஞானசேகரன் வியாழக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன், காமராஜா் சாலையிலுள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு சுமாா் 2 மணிநேரம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து ஞானசேகரன் சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டாா். குரல் மாதிரி பரிசோதனை தொடா்பான அறிக்கை விரைவில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தடய அறிவியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.