வயநாட்டில் இறந்த கிடந்த 3 புலிகள்: வனத்துறை தீவிர விசாரணை
வயநாடு: வயநாடு கூட்டமுண்டா எஸ்டேட் பகுதி மற்றும் மயக்கொல்லி வனப்பகுதியில் 3 புலிகள் இறந்ததை அடுத்து வனத்துறையின் 8 பேர் கொண்ட குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கேரளம் மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே கூட்டமுண்டா எஸ்டேட் பகுதியில் ஆண் புலி ஒன்று இறந்து கிடந்ததை கண்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் புலியின் உடலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, பிற்பகல் 2 மணியளவில் குறிச்சியாட் வனப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் இரண்டு பெரிய புலிகள் இறந்து கிடந்ததை கண்டனர். மூன்றாவது புலியின் சிதைந்த உடல் எச்சங்கள் வைத்திரி வனப் பிரிவின் கீழ் உள்ள ஒரு காபி தோட்டத்தில் கிடந்ததை கண்டனர். மூன்று புலிகளின் உடல்களையும் உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், மூன்று புலிகளின் இறப்பு குறித்து ஒரு சிறப்புக் குழுவை அமைத்து முழுமையான விசாரணையை நடத்தி புலிகளின் இறப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து அறிக்கை அளிக்குமாறு வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் உத்தரவிட்டார்.
ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அதிர்ச்சி அளிக்கிறது: இபிஎஸ்
இதனைத் தொடர்ந்து வடக்கு வட்ட வனத்துறை தலைமைப் பாதுகாவலர் கே.எஸ். தீபா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 3 புலிகள் இறப்புக்கு பின்னால் ஏதாவது சதித்திட்டம் உள்ளதா? அல்லது யாராவது இதன் பின்னணியில் இருந்து செயல்பட்டார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து வயநாடு மலை மாவட்டத்திற்குள் இரண்டு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட மூன்று புலிகளின் இறப்பு குறித்து கேரள வனத்துறையின் சிறப்பு குழுவினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சமீபத்தில் காபி கொட்டை பறித்துக்கொண்டிருந்த பழங்குடியினப் பெண் ஒருவரை புலி தாக்கி உயிரிழந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, வெவ்வேறு இடங்களில் மூன்று புலிகள் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.