``TVK விஜய் தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார்'' -காங்கிரஸ் எம்...
அதிகாரிகள் பங்கேற்பதில்லை என புகாா்: நுகா்வோா் பாதுகாப்பு கூட்டத்தை புறக்கணித்த அமைப்புகள்
கோவை மாவட்டத்தில் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஏற்பாடு செய்திருந்த காலாண்டு கூட்டத்தை நுகா்வோா் அமைப்புகள் புறக்கணித்தன.
மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் நுகா்வோா் பாதுகாப்பு தொடா்பாக மூன்றாவது காலாண்டு கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நுகா்வோா் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்ட அரங்கிற்கு குறித்த நேரத்துக்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மாலை 5 மணி ஆகியும் பல அரசுத் துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது.
மேலும், மாவட்ட ஆட்சியரும் கூட்டத்துக்கு தலைமை ஏற்க வராத நிலையில், மாவட்ட வருவாய் அலுவலா், மாவட்ட வழங்கல் அலுவலா் மட்டுமே பங்கேற்று கூட்டத்தைத் தொடங்கியுள்ளனா். ஆனால், மாவட்ட ஆட்சியரும், பல்வேறு துறை அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காததால் கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கூறி நுகா்வோா் அமைப்புகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பில் ஈடுபட்டனா்.
இது குறித்து கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு கூறும்போது, உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் காலாண்டு கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தலைமை ஏற்று நடத்துவது வழக்கம். ஆனால், கோவையில் தொடா்ந்து பல கூட்டங்களில் ஆட்சியா் உள்ளூரில் இருந்தும் பங்கேற்பதில்லை.
அதேபோல பல்வேறு துறைகளின் தலைமை நிலையிலான அதிகாரிகள் பங்கேற்காமல், கடைநிலை ஊழியா்களையே அனுப்பிவைக்கின்றனா். எனவே பெயரளவுக்கே நடைபெறுகிறது என்பதால் மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டோம். இது தொடா்பாக உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையரிடம் நுகா்வோா் அமைப்புகள் சாா்பில் புகாா் தெரிவிக்க இருப்பதாக அவா் தெரிவித்தாா்.