அதிமுக: "தன்மானம்தான் முக்கியம் என்றால் டெல்லி சென்றது ஏன்?" - இபிஎஸ்யை விமர்சித...
"அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அக்கட்சித் தலைவர்கள் அமித்ஷாவைச் சந்திக்கிறார்கள்"- நயினார் விளக்கம்
"ஆடிட்டர் குருமூர்த்தி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. 2026-ல் அதிமுக-பாஜக கூட்டணி திமுகவை ஆட்சியை விட்டு அகற்றும்" என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரை வந்த நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாஜக-வின் பூத் கமிட்டி மாநில மாநாடு வருகின்ற 21 ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.
1947 முதல் தற்போது வரை உயர்த்திய வரியைக் குறைத்தாக சரித்திரம் இல்லை, ஜிஎஸ்டி வரி குறித்து மத்திய நிதியமைச்சர் மட்டும் முடிவெடுக்க மாட்டார், எல்லா மாநில நிதியமைச்சர்களும் முடிவெடுப்பார்கள்.
ஜிஎஸ்டி வரிக்கு மத்திய அரசுதான் காரணம் எனத் தமிழக மக்களிடம் மாயயை உருவாக்கி வைத்திருந்தனர். 18 சதவிகிதமாக இருந்த வரி தற்போது 5 சதவிதமாக மாற்றப்பட்டுள்ளதால் 90 சதவிகிதம் தொழில்துறையினர் பயன் பெறுவார்கள்.
ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பதை மக்களுக்கு தீபாவளி பரிசாக நிதியமைச்சர், பிரதமர் வழங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் வரவேற்க மறுக்கிறார். வேண்டாத பொண்டாட்டி கை பட்டால் குத்தம், கால் பட்டால் குத்தம் என்பதைப் போல மத்திய அரசு எதைச் செய்தாலும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வரவேற்கும் எண்ணம் இல்லை.
தேர்தல் வருவதால் ஜிஎஸ்டியைப் போல் தமிழகத்தில் உயர்த்திய சொத்து வரி, மின்சார கட்டணத்தை தமிழ்நாடு அரசு குறைக்கும் என நினைக்கிறேன்.
அதிமுகவில் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளது பொறுத்திருந்து பார்ப்போம். அமித்ஷா யாரை முதலமைச்சர் வேட்பாளராகச் சொல்கிறாரோ அவரை வெற்றி பெற வைக்க வேலை செய்ய தயார் என டிடிவி தினகரன் கூறியிருந்தார். தற்போது முதலமைச்சர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்கிறார். வரும் காலங்களில் என்ன கூறுகிறார் என்பதையும் பார்ப்போம்.
2026 தேர்தல் பாஜக-வுக்கு இலக்கு அல்ல என்ற ஆடிட்டர் குருமூர்த்தி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. 2026ல் அதிமுக-பாஜக கூட்டணி திமுகவை ஆட்சியை விட்டு அகற்றும். 2029 ல் நாடாளுமன்றத்திற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாகச் செல்ல வேண்டும்.
அமித்ஷா சென்னைக்கு வந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை அறிவித்தார், அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அதிமுக தலைவர்கள் அமித்ஷாவைச் சந்தித்து வருகிறார்கள். திமுகவில் ஜனநாயகம் இல்லாததால் திமுக தலைவர்கள் அமித்ஷாவைச் சந்திக்கவில்லை. திமுகவில் கலைஞர், ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி எனப் பதவி வகித்தால் எப்படி ஜனநாயகம் இருக்கும்?
தேர்தல்களில் தில்லுமுல்லு செய்திருந்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்திருக்கும். ஒரே நாடு ஒரே தேர்தலில் என்ன நன்மைகள் உள்ளன என விஜய் புரிந்துகொள்ள வேண்டும். அரசுக்குச் செலவைக் குறைக்கதான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறோம்.
5 வருடத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்களால் அரசு பணம் அதிகம் செலவாகிறது. அதைக் குறைக்கதான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறோம். விஜய்க்கு அரசியல் தெரிந்திருந்தால் இதெல்லாம் தெரிந்திருக்கும். முன்னாள் முதல்வர் கலைஞர் கூட நெஞ்சுக்கு நீதி நூலில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று எழுதியுள்ளார். இதையெல்லாம் விஜய்யைப் படித்து பார்க்கச் சொல்லுங்கள்" என்றார்.