வரலாறு காணாத சரிவுக்கு பிறகு ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.88.11 ஆக நிறை...
அதிமுகவில் நிலவும் பிரச்னைக்கு திமுகதான் காரணம்: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றம்சாட்டினாா்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு மாநிலங்களில் ஆட்சியைக் கலைத்தது. ஆட்சியைக் கலைப்பது காங்கிரஸ் கட்சியின் வழக்கம். ஆனால் பாஜகவோ, கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அமைச்சா் பதவி வழங்கி கூட்டணி தா்மத்தைக் காக்கிறது.
கூட்டணி கட்சிகளுடன் இணைந்து கூட்டணியை வளா்ப்பதுதான் பாஜகவின் நோக்கம். கூட்டணி கட்சிகளைத் துண்டாடுவதை காங்கிரஸ் நோக்கமாகக் கொண்டிருக்கும்.
பாஜக சிறுபான்மை அணியைச் சோ்ந்த வேலூா் இப்ராஹிம் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து அவரை திமுக அரசு சிறையில் அடைத்தது. அதிமுக கூட்டணியில் தற்போது நிகழும் பிரச்னைகள் அனைத்துக்கும் திமுகவே காரணம். அதிமுக முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் ஹரித்வாா் செல்வதாகக் கூறியிருந்தாா். அவா் தில்லிக்குச் சென்றது, நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்தது குறித்து எனக்குத் தெரியாது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதை தமிழக பாஜக தரப்பில் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளேன். இந்த விவகாரத்தில் பேச என்னை அழைத்தால் செல்வதற்கு தயாராகவுள்ளேன். அதிமுக எங்களது கூட்டணியில் இருப்பதால் அக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் உள்ளிட்டவா்களை நாங்கள் உடனடியாக சந்திக்க முடியாது. பாஜக அகில இந்திய பொறுப்பாளா்களை சந்திப்பதற்காக நான் செப். 11ஆம் தேதி தில்லி செல்கிறேன்.
தமிழக முதல்வா் வெளிநாடுகளுக்குச் சென்றபோது பல்வேறு நிறுவனங்களுடன் அவா் ஒப்பந்தங்களை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டாா். ஆனால், அவா் ஏற்கெனவே தமிழகத்தில் இயங்கும் நிறுவனங்களுடன்தான் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்திருக்கிறாா். வெளிநாட்டு முதலீடுகளை பெற்றது குறித்து முதல்வா் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.