சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்த பாகிஸ்தானியர் வெளியேற்றம்!
ஹைதராபாத்தில் இருந்து, சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்த பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் அவரது தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த முஹம்மது உஸ்மான் (எ) முஹம்மது அப்பாஸ் இக்ரம் (வயது 48), கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக நேபாளம் வழியாக இந்தியாவினுள் குடியேறி வசித்து வந்துள்ளார்.
அவர் மீது ஹைதராபாத் நகரத்தில் 4 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை அந்நகர காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்ற விசாரணைக்கு பிறகு அவர் ஹைதராபாத்தில் உள்ள தடுப்புக் காவல் சிறையில் அடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், விசாரணையில் அவர் பாகிஸ்தானியர் என்பது தெரியவந்துள்ளது. இதனால், மத்திய உள் துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களின் உதவியுடன் அவர், நேற்று (செப்.9) பஞ்சாபில் உள்ள அட்டாரி - வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்துடன், சட்டவிரோதமாகவும் கடத்தல் மூலமாகவும், இந்தியாவுக்குள் நுழைந்து வசித்த சுமார் 20 வங்கதேசத்தினர், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி அவர்களது தாயகத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நாட்டின் மிக நீண்ட கண்ணாடிப் பாலம்! எங்கு அமைகிறது?