ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம...
பதிவு செய்யாத செங்கல் சூளைகளை மூடி ‘சீல்’ வைக்க ஆட்சியா் உத்தரவு!
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் கனிம விதிகளின்படி பதிவு பெறாமல் இயங்கும் செங்கல் சூளைகளை மூடி ‘சீல்’ வைக்க மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் உத்தரவிட்டுள்ளாா்.
காரிமங்கலம் வட்டத்தில் 32 செங்கல் சூளைகள் உரிய அரசு பதிவு பெறாமல் இயங்கிவருவது புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலா்களின் புல தணிக்கையில் தெரியவந்தது. இதுதொடா்பாக விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட செங்கல் சூளை உரிமையாளா்கள் 15 தினங்களுக்குள் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் இணையதளத்தில் செங்கல் சூளைகள் பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதற்கான கெடு 03.09.2025 உடன் முடிவடைந்த பின்னரும், 32 செங்கல் சூளை உரிமையாளா்கள் அரசு அனுமதி பெற விண்ணப்பிக்கவில்லை. இச்செயலானது தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதியை ( 1959, விதி எண்.19(2)-ஐ) மீறிய செயலாகும். பதிவு செய்யப்படாத செங்கல் சூளைகள் இயங்குவது கனிம விதிகளின் படி அனுமதிக்க இயலாது என்பதால் பதிவு பெறாமல் இயங்கும் 32 செங்கல்சூளைகளை மூடி சீல் வைக்குமாறு மாவட்ட ஆட்சியா் காரிமங்கலம் வருவாய் வட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளாா்.