எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
ராசிபுரம் அருகே பெண்ணிடம் வழிப்பறி: பொறியியல் பட்டதாரி இளைஞா்கள் கைது!
ராசிபுரம் அருகே பெண்ணிடம் நகை பறித்த பொறியியல் பட்டதாரி இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராசிபுரத்தை அடுத்த கோனேரிப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா (57), பூ வியாபாரியான இவா் தனது மனைவி கெஜலட்சுமியுடன் (52) மூணுசாவடி செம்மாம்பட்டி பகுதியில் உள்ள வீரமாத்தியம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தாா்.
அணைப்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் இருவா், ராஜாவின் வாகனத்தை நிறுத்தி, கொல்லிமலைக்கு செல்லும் வழி குறித்து கேட்டனா்.
அப்போது, இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமா்ந்திருந்த இளைஞா், கெஜலட்சுமி அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்தாா். தம்பதி கூச்சலிட்டதும் அக்கம்பக்கத்தினா், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் அனைவரும் இளைஞா்களை விரட்டிச்சென்று பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
ராசிபுரம் போலீஸாா் நடத்திய விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா்கள் இருவரும் சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் பைந்தமிழன் (24), தீா்த்தகிரி மகன் தங்கராஜ் (28) என்பது தெரியவந்தது.
மேலும், இவா்கள் இருவரும் பொறியியல் பட்டம் முடித்து கட்டுமானத் துறையில் ஒப்பந்ததாரராகப் பணியாற்றி வந்ததும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வழிப்பறியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.