Weekly Horoscope: வார ராசி பலன் 17.11.2024 முதல் 23.11.2024 | Vaara Rasi Palan |...
அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு - முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி
மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியை வெறுக்கத் தொடங்கியுள்ள மக்கள், அதிமுகவை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனா் என முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நத்தம் சாலையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் சி.சீனிவாசன் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் அதிமுகவை மக்கள் ஆதரிக்கத் தொடங்கிவிட்டனா். இந்த உறுதியோடு, அதிமுக தொண்டா்கள் உழைக்க முன் வர வேண்டும். நடைபெற்று முடிந்த மக்களவைத் தோ்தல் முடிவுகளை மறந்துவிடுங்கள். அது மோடியா, ராகுலா என்ற அடிப்படையில் நடைபெற்றத் தோ்தல்.
கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொண்டாா்கள் எனில், 2021ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை விட மக்களவைத் தோ்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் ஏன் குறைந்தது. திமுகவை மக்கள் வெறுக்கத் தொடங்கிவிட்டனா் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் அமைப்புச் செயலா் வி.மருதராஜ், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் தென்னம்பட்டி எஸ்.பழனிச்சாமி, பா.பரமசிவம், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலா் ராஜ் சத்யன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.