'அந்த பொண்ணுக்கு 3 முறை நிச்சயம் ஆகிருக்கு; எல்லாமே மோசடி' - இருட்டுக்கடை உரிமையாளர் சம்பந்தி
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகளுக்கு வரதட்சணை கொடுமை நடந்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகள் கனிஷ்கா தன் மாமனார் யுவராஜ் சிங் மற்றும் கணவர் பல்ராம் சிங் குறித்து பல்வேறு புகார்கள் முன்வைத்தார்.

மேலும், கனிஷ்காவின் தாய் கவிதாவும் பல்வேறு புகார்களை முன் வைத்தார். இதற்கு கோவையில் உள்ள யுவராஜ் மற்றும் பல்ராம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ், “நாங்கள் 4 தலைமுறைகளாக ஏற்றுமதி தொழில் செய்து முன்னுக்கு வந்துள்ளோம்.
நான் ஆன்மிக நாட்டம் கொண்டவன். அதனால் எளிய குடும்பத்தில் மகனுக்கு பெண் எடுக்க வேண்டும் என்று நினைத்து ஒரு மெக்கானிக்கின் மகளை பார்த்தோம். 350 நாள்களுக்கு முன்னர் தான் கவிதாவுக்கு இந்தக் கடை வந்தது. அவர்கள் கார் ஓர்க் ஷாப் தான் நடத்தி வந்தனர்.

பார்ட்னர்களின் கையெழுத்தில் மோசடி செய்து இவர்கள் அல்வா கடையை அபகரித்ததாக திருநெல்வேலி காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அதற்கெல்லாம் முன்பே திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கடையே அவர்களுக்கு இப்போது தான் வந்துள்ளது அதை நாங்கள் ஒருபோதும் வரதட்சணையாக கேட்கவில்லை. அதேபோல திருமணத்துக்காக ஒரு ரூபாய் கூட நாங்கள் வரதட்சணை வாங்கவில்லை. அந்தக் கடையின் பெயரில் வங்கியில் ரூ.5 கோடி கடன் உள்ளது. அவர்களிடம் உள்ள கார் கூட தவணையில் தான் வாங்கினார்கள்.

தவணை கட்ட முடியாத காரணத்தால் இனோவா காரை விற்றுவிட்டனர். திருமணத்தின் போது அவர்களுடைய மகளுக்காக அவர்கள் ஒரு சூட்கேஸில் நகையை கொடுத்தார்கள். அவர்களின் மகள் சென்ற போது அதையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். அவர்கள் அன்பளிப்பாக கொடுத்த காரும் கூட அவர்களின் வீட்டிலேயே தான் இருக்கிறது.
நான் வழக்கறிஞர் என்பதால் இவர்களின் மோசடி ஆவணங்கள் குறித்து வெளியில் வந்துவிடும் என்று பயந்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இவர்கள் சொல்லும் காரை பணம் கொடுத்து புக் செய்தது நான் தான். இவர்கள் சொல்லும் காலகட்டத்தில் என் மனைவி இந்தியாவிலேயே இல்லை. அப்போது நானும் மருத்துவ சிகிச்சையில் இருந்தேன். இதற்கு முன்பு அந்த பெண்ணுக்கு 3 முறை திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று திருமணம் ரத்தாகியுள்ளது.

அதுவே இப்போதுதான் தெரிந்தது. நான் யாரையும் மிரட்டவில்லை. கடன் பிரச்னையில் மனநோயாளியாக மாறி ஆதாரமில்லாமல் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். அவர்களை விட பொருளாதாரத்தில் நாங்கள் சிறப்பான நிலையில் உள்ளோம். நான் 7 கோயில்களை கட்டியுள்ளேன். கடன் கட்ட முடியாத நிலையில் இருப்பவர்கள் என்னைப் பார்த்து வரதட்சணை கேட்டேன் என்பதை ஏற்க முடியாது.” என்றார்.
கனிஷ்காவின் கணவர் பல்ராம் கூறுகையில், “திருமணம் முடிவு செய்வதற்கு முன்பே நாங்கள் காரை புக் செய்துவிட்டோம். அப்படி இருக்கும்போது இவர்களிடம் எப்படி கார் கேட்பேன். அது பொய் குற்றச்சாட்டு. அவருக்கு மிட் நைட்டில் ஆண்கள் கால் செய்வார்கள். அதை நான் கண்டுபிடித்து விட்டேன். அடிக்கடி பார்லர் செல்கிறேன் என்று கூறி 4-5 மணி நேரம் வெளியில் சென்றுவிடுவார்.

இதைப்பற்றி கேட்டதால் ‘என்னை யாரும் கன்ட்ரோல் செய்ய கூடாது’ என்று பிரச்னை செய்து வெளியேறி விட்டார். தற்போது எனக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மாற்றி பேசுகிறார்கள். திருமணமான ஒரு மாதத்திலேயே என் அப்பா, அம்மா குறித்து எல்லாம் நண்பர்களிடம் தவறாக பேசியுள்ளார். என்னையும் மரியாதை குறைவாக பேசினார். அதற்கான ஆதாரங்கள் உள்ளது.” என்றார்.