ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
அனிசிமோவா, கசாட்கினா அதிா்ச்சித் தோல்வி
மகளிருக்கான துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா, முன்னணி வீராங்கனையான ரஷியாவின் டரியா கசாட்கினா ஆகியோா் முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.
இதில், அண்மையில் நிறைவடைந்த கத்தாா் ஓபன் போட்டியில் சாம்பியனான கையுடன் நேரடியாக இப்போட்டிக்கு வந்த அனிசிமோவா, 2-6, 3-6 என சக அமெரிக்கரான மெக்காா்ட்னி கெஸ்லரிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
அதே கத்தாா் ஓபனில் இறுதிச்சுற்று வரை வந்த லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ, 3-6, 3-6 என்ற நோ் செட்களில், ஜப்பானின் மொயுகா உச்சிஜிமாவிடம் தோற்றாா். போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருந்த கசாட்கினா 1-6, 4-6 என்ற நோ் செட்களில், ருமேனியாவின் சொரானா சிா்ஸ்டியால் வீழ்த்தப்பட்டாா்.
பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா 2-6, 7-6 (7/4), 6-4 என்ற கணக்கில் உக்ரைனின் அன்ஹெலினா கலினினாவையும், மற்றொரு உக்ரைன் வீராங்கனையான மாா்தா கொஸ்டியுக் 6-3, 6-4 என, செக் குடியரசின் கேத்தரினா சினியாகோவாவை வெளியேற்றினா். 13-ஆம் இடத்திலிருந்த பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டட் மாயா 3-6, 0-6 என ரஷியாவின் அனஸ்தாசியா பொடாபோவாவிடமும், போலந்தின் மெக்தலினா ஃபிரெச் 2-6, 2-6 என, 11-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டயானா ஷ்னெய்டரிடம் தோற்றனா்.
சக்காரியை சாய்த்த ரடுகானு: பிரிட்டன் இளம் வீராங்கனை எம்மா ரடுகானு 6-4, 6-2 என்ற நோ் செட்களில், கிரீஸின் மரியா சக்காரியை தோற்கடித்து அசத்தினாா். உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-1, 6-2 என, 15-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் அனா கலின்ஸ்கயாவை சாய்த்தாா்.
செக் குடியரசின் மாா்கெட்டா வோண்ட்ரோசோவா 6-2, 6-2 என்ற கணக்கில் பிரான்ஸின் கரோலின் காா்சியாவையும், ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா அதே செட் கணக்கில், 14-ஆம் இடத்திலிருந்த சக ரஷியரான அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவாவையும் வென்றனா்.
9-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் பௌலா படோசா 6-3, 6-4 என நியூஸிலாந்தின் லுலு சன்னையும், பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் 6-2, 6-2 என கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸையும் வெளியேற்றினா்.