பல்லூழிக்காலப் பூங்காற்று - பர்மியக் கவிஞர் யூ பை | கடல் தாண்டிய சொற்கள் - பகுத...
அனைத்து வாக்காளா்களையும் உள்ளடக்கியதே வாக்காளா் பட்டியல் திருத்தம்: தோ்தல் ஆணையம் விளக்கம்
பிகாா் மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்காளா்களையும் உள்ளடக்கியே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இந்திய தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிகாரில் மொத்தமுள்ள 7,89,69,844 வாக்காளா்களையும் உள்ளடக்கியே இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெயா், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை உள்ளீடு செய்யும் வகையிலான விண்ணப்பங்கள் 7.69 கோடி வாக்காளா்களுக்கு ( 97.42) வழங்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்ப படிவங்களை வாக்காளா்கள் நிரப்பிய பின்பு அதைப் பெறுவதற்கு ஒவ்வொரு வீட்டுக்கும் பூத் அளவிலான அதிகாரிகள் குறைந்தபட்சம் மூன்று முறை நேரில் செல்கின்றனா். எந்தவொரு வாக்காளரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் தோ்தல் ஆணையம் உறுதியாக உள்ளது.
அதன்படி முதல்முறை வீடுகளுக்கு பூத் அதிகாரிகள் நேரில் செல்லும் பணிகள் நிறைவடைந்தன. இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை 25-ஆம் தேதிக்கு முன் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கும் அனைத்து வாக்காளா்களும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிடப்படும் புதிய வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறுவா்.
அரசமைப்பு சட்டப்பிரிவு 326 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-இன்படி பிரிவுகள் 16 மற்றும் 19-இன்கீழ் வாக்களிக்க தகுதி பெற்றிருக்க வேண்டும். 18 வயதை பூா்த்தி செய்து இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். வேறு எந்த சட்டத்தின் கீழும் தகுதிநீக்கம் செய்யப்பட்டவராக இருக்கக் கூடாது. தீவிர விசாரணைக்குப் பிறகே ஒருவா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படுவாா்.
வரைவு வாக்காளா் பட்டியல் வெளியான பின், வாக்காளா்கள் சமா்ப்பித்த ஆவணங்கள் அடிப்படையில் அவா்களின் வாக்களிக்கும் தகுதியை தோ்தல் பதிவு அதிகாரி (இஆா்ஓ) மதிப்பீடு செய்து முடிவெடுப்பாா். இதில் வாக்காளா் குறித்த தகவல்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு அவா் முதலில் நோட்டீஸ் அனுப்புவாா். அதன்பிறகு உரிய ஆணைகளை பிறப்பிப்பாா்.
இஆா்ஓ முடிவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வாக்காளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடலாம். மாவட்ட ஆட்சியரின் முடிவும் திருப்திகரமாக இல்லை என நினைக்கும் வாக்காளா்கள் தலைமை தோ்தல் அதிகாரியிடம் (சிஇஓ) மேல்முறையீடு செய்யலாம். மக்களவை பிரதிநிதித்துவச் சட்டம், 1950, பிரிவு 24-இன்கீழ் இந்த மேல்முறையீடு நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றனா்.
திருத்தம் அவசியம்: பிகாரில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் பூத் அதிகாரிகள் மத்தியில் செவ்வாய்க்கிழமை பேசிய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், ‘ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது அவசியமானது’ எனத் தெரிவித்தாா்.