ஆப்பிள் சிஓஓ பதவிக்கு இந்திய வம்சாவளி நியமனம்! சம்பளம், பொறுப்புகள் என்னென்ன?
உலகளாவிய மொபைல்போன் சந்தையில் தனக்கென இடத்தை ஆப்பிள் நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் உயர் பொறுப்பில் பணிபுரிய இந்திய வம்சாவளி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக இந்திய வம்சாவளி சபீஹ்கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்பிளின் தற்போதைய தலைமை இயக்க அதிகாரி ஜெஃப் வில்லியம்ஸ், விரைவில் ஓய்வுபெற இருப்பதால், அவரது பதவிக்கு சபீஹ்கான் நியமிக்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மொராதாபாத் நகரைச் சேர்ந்த சபீஹ்கான், 1995 முதல் 30 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளிப்படிப்பில் இந்தியாவிலும், உயர்கல்வி அமெரிக்காவிலும் தொடர்ந்துள்ளார்.
1995-ல் ஆப்பிள் நிறுவனத்தின் கொள்முதல் குழுவில் இணைந்த சபீஹ்கான், நிறுவனத்தின் உலகளாவிய விநியோகச் சங்கிலியை வழிநடத்துதல், கொள்முதல், திட்டமிடல், உற்பத்தி, தயாரிப்பு முதலானவற்றை மேற்பார்வையிடும் பணிகளை மேற்கொண்டுள்ளார். தற்போதைய தலைமை இயக்க அதிகாரி ஜெஃப் வில்லியம்ஸின் பதவிக்காலம் முடியும்வரையில், ஆப்பிள் கைக்கடிகார உற்பத்தியை சபீஹ்கான் மேற்பார்வையிடவுள்ளார்.
சமீபத்தில் ஆப்பிள் போன்களில் கொண்டுவரப்பட்டுள்ள புதுப்புது மாற்றங்களால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்திருப்பதாகவும், ஆப்பிள் விற்பனை குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தலைமை இயக்க அதிகாரியாக பொறுப்பேற்கும் சபீஹ்கான், ஆப்பிளின் உற்பத்தி மற்றும் நிர்வாகங்களை மேம்படுத்த வேண்டிய கடமையுடன் வழிநடத்தவுள்ளார்.
ஜெஃப் வில்லியம்ஸின் அடிப்படை சம்பளமாக ஒரு மில்லியன் டாலர் வழங்கப்பட்டாலும், பிற கொடுப்பனவுகள் என மொத்த வருவாயாக சுமார் 23 மில்லியன் டாலர் (ரூ. 197 கோடி) வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், முதலில் தலைமை இயக்க அதிகாரியாக இருந்துதான் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். ஆகையால், சபீஹ்கானும் பதவி உயர்வு பெறலாம் என்று சமூக ஊடகங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.