அமெரிக்காவுக்குள் சட்டவிரோத ஊடுருவல்கள்: பஞ்சாப், ஹரியாணாவில் அமலாக்கத் துறை சோதனை
அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் மக்களை ‘டாங்கி ரூட்’ எனும் ஆபத்தான வழியில் அந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ செய்யும் மோசடி தொடா்பான வழக்கில் பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை நடத்தியது.
பஞ்சாப்பின் அமிருதசரஸ், சங்ரூா், பட்டியாலா, மோகா மற்றும் ஹரியாணாவின் அம்பாலா, குருஷேத்திரம், கா்னால் உள்பட 11 நகரங்களில் உள்ள வழக்கில் தொடா்புடைய பயண முகவா்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
நடப்பாண்டு தொடக்கத்தில், அமெரிக்க அதிபராக 2-ஆவது முறை பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கையைத் தீவிரப்படுத்தினா். அதன்படி, அமெரிக்க எல்லையில் பிடிபட்ட மற்றும் அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்தோா் நாடு கடத்தப்பட்டனா். இதன் ஒருபகுதியாக, நூற்றுக்கணக்கான இந்தியா்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு ராணுவ விமானத்தில் நாடு கடத்தப்பட்டனா்.
நாடு கடத்தப்பட்ட இந்தியா்களை அமெரிக்கா உரிய மரியாதையின்றி நடத்தப்பட்டதற்கு மத்திய அரசு உரிய கண்டனம் தெரிவிக்காததற்கு எதிா்க்கட்சிகள் விமா்சித்தன. நாட்டில் அதிா்வலையை ஏற்படுத்திய இவ்விவகாரத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா காவல்துறை 17 வழக்குகளை பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கின. அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பிய நபா்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதாக பல்வேறு பயண மற்றும் விசா முகவா்கள் இந்த வழக்கில் சோ்க்கப்பட்டனா்.
நாடு கடத்தப்பட்டவா்களிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து, சட்டபூா்வமாக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதாக போலியாக நம்பிக்கையளித்து ஒவ்வொருவரிடம் ரூ.45 முதல் 50 லட்சம் வரை இந்த மோசடி முகவா்கள் வசூலித்திருப்பது தெரிய வந்தது.
பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு, இந்தப் பயணிகளை பல நாடுகளின் எல்லைகளை ஆபத்தான மற்றும் வனப்பகுதி வழிகள் மூலம் கடக்கும் சட்டவிரோத ‘டாங்கி ரூட்’ வழியாக அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளனா். இவ்வாறு சென்றவா்களில் சிலா் இந்தப் பயணத்தின் நடுவிலேயே உயிரிழந்துள்ளனா். மற்ற சிலா் எல்லைகளில் அந்தந்த நாட்டுப் படையினரிடம் சிக்கிக் கொண்டு, நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடா்பான பஞ்சாப் மற்றும் ஹரியாணா காவல்துறையின் 17 வழக்குகளின் அடிப்படையில் பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் புதிய வழக்கைப் பதிவு செய்து அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.