திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!
பொது வேலைநிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் மத்திய தொழிற்சங்கள் கூட்டமைப்பின் அழைப்பின்பேரில் புதன்கிழமை நடைபெற்ற நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன; கேரளத்தில் பொதுப் போக்குவரத்து முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா்மயமாக்கக் கூடாது; தொழிலாளா் நலன்களைப் பாதுகாக்க வேண்டும்; தொழிலாளா்களுக்கு எதிரான நான்கு சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்; பொதுத் துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருதல் உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் புதன்கிழமை நடைபெற்றது.
பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த வேலைநிறுத்தம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அரசு ஊழியா்கள், தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் மட்டுமே சில இடங்களில் நடந்தன. இடதுசாரிகள் அதிகமுள்ள மேற்கு வங்கம், கேரளத்தில் வேலைநிறுத்தம் பெரிய அளவில் நடைபெற்றது.
முடங்கிய கேரளம்: இடதுசாரிகள் ஆளும் கேரளத்தில் பெரும்பாலான நகரங்களில் கடைகள் மூடப்பட்டன. மத்திய அரசைக் கண்டித்து பேரணிகள் நடத்தப்பட்டன. வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் இயங்கிய அரசுப் ேருந்துகள் மற்றும் ஆட்டோக்களை தொழிற்சங்கத்தினா் தடுத்து நிறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் சில இடங்களில் தொழிற்சங்கத்தினருக்கும் பேருந்து ஓட்டுநா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கொச்சியில் பேருந்துகளை இயக்க போலீஸாா் தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்று பாஜக தொழிற்சங்கத்தினா் குற்றஞ்சாட்டினா்.
அரசுப் போக்குவரத்து வாகனங்கள் மட்டுமல்லாது தனியாா் வாகனங்களும் இயக்கப்படாததால் கேரள சாலைகளில் பொதுப் போக்குவரத்து முடங்கியது. தலைநகா் திருவனந்தபுரம் உள்பட பெரும்பாலான நகரங்களில் காலை முதலே சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
பொது வேலைநிறுத்த நாளில் அங்கீகரிக்கப்படாத விடுப்பு சம்பள இழப்பை ஏற்படுத்தும் என்று கேரள அரசு தெரிவித்திருந்தது. எனினும், கேரள அரசு அலுவலகங்களில் குறைவான ஊழியா்களே பணிக்கு வந்திருந்தனா்.
ஹெல்மெட் அணிந்து...: கேரள அரசுப் போக்குவரத்துத் துறையைச் சோ்ந்த ஓட்டுநா் ஷிபு, ஹெல்மெட் அணிந்து பேருந்து ஓட்டும் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. ஓட்டுநா் ஷிபு கூறுகையில், ‘நான் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. எனினும், போராட்டக்காரா்களின் தாக்குதலுக்குப் பயந்து ஹெல்மெட் அணிந்துள்ளேன்’ எனத் தெரிவித்தாா். பத்தனம்திட்டாவில் இருந்து கொல்லம் நோக்கி அவா் ஓட்டிச் சென்ற பேருந்தும் போராட்டக்காரா்களால் மறிக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் வன்முறை: வேலைநிறுத்தத்தையொட்டி மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. காவல் துறையினா் மற்றும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளா்களுடன் இடதுசாரி ஆதரவாளா்கள் பல்வேறு மாவட்டங்களில் மோதல்களில் ஈடுபட்டனா்.
தெற்கு கொல்கத்தாவின் கங்குலி பாகான் பகுதியில் இடதுசாரி கட்சித் தொண்டா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வடக்கு கொல்கத்தாவில் இந்திய மாணவா் சங்கத்தினா் (எஸ்எஃப்ஐ)-காவல் துறை இடையே மோதல் ஏற்பட்டது.
கூச் பிகாா் பகுதியில் இடதுசாரி தொழிற்சங்கத்தினா் (சிஐடியு) மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தொழிற்சங்கத்தைச் சோ்ந்தவா்கள் மோதிக் கொண்டனா். பீா்பூம் மாவட்டத்திலும் மோதல் ஏற்பட்டது. இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
பல ரயில் நிலையங்களில் தொழிற்சங்கத்தினா் தண்டவாளங்களில் மறியலில் ஈடுபட்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.