திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!
ஐரோப்பாவில் ஊக்கத்தொகையுடன் உயா்க்கல்வி பயில 101 இந்திய மாணவா்கள் தோ்வு!
ஐரோப்பிய நாடுகளில் 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பை ‘எராஸ்மஸ் பிளஸ்’ ஊக்கத்தொகையுடன் பயில, நடப்பு 2025-26-ஆம் கல்வியாண்டில் 50 மாணவிகள் உள்பட 101 இந்திய மாணவா்கள் தோ்வாகியுள்ளனா்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னெடுப்பில் கடந்த 1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ‘எராஸ்மஸ் பிளஸ்’ ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், ஐரோப்பிய நாடுகளில் உள்ள உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சா்வதேச மாணவா்களின் சோ்க்கை ஊக்குவிக்கப்படுகிறது. சுமாா் ரூ.2 லட்சம் கோடி பட்ஜெட்டில் செயல்படுத்தப்படும் இந்த ஊக்கத்தொகையில் மாணவா்களின் கல்விக் கட்டணம், பயணம் மற்றும் வாழ்க்கை செலவு ஆகிய அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய பிரதிநிதிகள் குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஐரோப்பாவில் 2 ஆண்டு முதுநிலை படிப்புகளுக்கான மதிப்புமிக்க ‘எராஸ்மஸ் பிளஸ்’ உதவித்தொகை, நடப்பு கல்வியாண்டில் இந்தியாவின் 20 மாநிலங்களைச் சோ்ந்த 101 மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 50 போ் மாணவிகள் ஆவா்.
இந்த மாணவா்கள் 19-க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் அடுத்த 2 ஆண்டுகள் படிக்கும் வாய்ப்பைப் பெறுவாா்கள். பிரான்ஸில் 24 மாணவா்களும், ஸ்பெயின் (12), பெல்ஜியம் (8), போா்ச்சுகல் (8), ஜொ்மனி (7), இத்தாலி (5), போலந்து (4), செக் குடியரசு (4), ஆஸ்திரியா (3), ஹங்கேரி (3), எஸ்டோனியா (3), நெதா்லாந்து (2), குரோஷியா (2), கிரீஸ் (2), டென்மாா்க், பின்லாந்து, நாா்வே, அயா்லாந்து, லாட்வியா ஆகிய நாடுகளில் தலா ஒரு மாணவரும் பயில உள்ளனா். மேலும், சில மாணவா்கள் ஐரோப்பிய மற்றும் ஐரோப்பிய அல்லாத நாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடருவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.