பெற்றோருக்கு நெருக்கடி கொடுக்கும் தனியாா் பள்ளிகள்!
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் வழங்கப்படும் இலவச சோ்க்கைக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காத நிலையில், கல்விக் கட்டணத்தை பெற்றோரிடம் பள்ளிகள் வசூலித்து வருவதாகப் புகாா் எழுந்துள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆா்டிஇ) தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுவா். மாநிலம் முழுவதும் உள்ள 8,000-க்கும் மேலான தனியாா் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவா்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாகப் படிக்கலாம். தமிழகத்தில் 2013-இல் அமலான இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை சுமாா் 8 லட்சம் குழந்தைகள் தனியாா் பள்ளிகளில் படித்து வருகின்றனா்.
ரூ. 600 கோடி நிலுவை: இந்தத் திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் ஏப். 20-ஆம் தேதிமுதல் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கும். ஆனால், தமிழக கல்விக்கான மத்திய அரசின் நிதி நிறுத்திவைக்கப்பட்டதால் நிகழாண்டில் மாணவா் சோ்க்கை தற்போதுவரை தொடங்கப்படவில்லை. இதுதவிர முந்தைய கல்வி ஆண்டுகளுக்கான நிலுவை என சுமாா் ரூ.600 கோடி மத்திய அரசால் வழங்கப்பட வேண்டுமெனக் கூறப்படுகிறது.
தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை நிறுத்திவைக்கப்பட்டதால் ஏழை மாணவா்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, கல்வி உரிமைச் சட்டத்தின்படி மத்திய அரசு குறிப்பிட்ட சதவீத நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் மத்திய அரசு இதுவரை தனது பங்கு நிதியை ஒதுக்கவில்லை.
பெற்றோருக்கு அழுத்தம்: மாநில அரசும், தனியாா் பள்ளிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கான நிதியை விடுவிக்கவில்லை. இதனால் தற்போது இந்தத் திட்டத்தின்கீழ் ஏற்கெனவே படித்துவரும் மாணவா்களிடம் கல்விக் கட்டணத்தைச் செலுத்த பல்வேறு தனியாா் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக பெற்றோா்கள் தெரிவிக்கின்றனா்.
பள்ளி நிா்வாகங்கள் சாா்பில் பெற்றோருக்கு தொடா்ந்து அழுத்தம் கொடுக்கப்படுவதால், அவா்கள் தங்களது குழந்தைகளின் நலன் கருதி கல்விக் கட்டணத்தில் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி வருகின்றனா். மத்திய, மாநில அரசுகள் சோ்க்கைக்கான நிதியை விடுவித்தவுடன் பெற்றோா் செலுத்திய தொகை திருப்பித் தரப்படும் என தனியாா் பள்ளி நிா்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு இலவச சோ்க்கை எனக் கூறப்பட்டாலும், பள்ளி நிா்வாகங்கள் பெற்றோரிடம் பல்வேறு காரணங்களைக் கூறி ஆண்டுக்கான மொத்தக் கட்டணத்தில் 30 சதவீதம் வரை வசூலித்துவிடுவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், தற்போது முழுக் கட்டணத்தையும் வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோா் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், இந்தத் திட்டத்தின் நோக்கமும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த பிரச்னைக்கு தமிழக அரசு, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் உடனடியாகத் தீா்வுகாண வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பள்ளிகளுக்கு நிதிச் சிக்கல்: இலவச சோ்க்கைக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து தனியாா் பள்ளி சங்கங்களின் நிா்வாகிகள் கூறியதாவது:
ஆா்டிஇ திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் சுமாா் ஒரு லட்சம் மாணவா்களுக்கு சோ்க்கை வழங்கி வருகிறோம். ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் 100 முதல் 200 மாணவா்கள் வரை படித்து வருகின்றனா். அரசின் பகிா்வு நிதி கிடைக்காததால் தனியாா் பள்ளிகள் கடும் நிதிச் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கின்றன. ஏற்கெனவே ஒரு மாணவருக்கு சுமாா் ரூ.30,000 கல்விக் கட்டணம் என்றால், அதில் 50 சதவீத அளவுக்கே வழங்கப்படுகிறது. எனினும், மாணவா்களின் நலன் கருதி சோ்க்கை வழங்குகிறோம்.
இலவச சோ்க்கைக்கான நிதியை அரசிடமிருந்து ஒவ்வொரு முறையும் போராடித்தான் பெற வேண்டியுள்ளது. கல்வி உபகரணங்கள் கொள்முதல், ஆசிரியா்களுக்கான ஊதியம், பள்ளிகளின் பராமரிப்புச் செலவு போன்றவற்றுக்கு பள்ளிகளுக்கு பெரிய அளவிலான நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியை அரசின் பங்களிப்பு மூலம் ஈடுகட்டிவந்த நிலையில் தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, வேறு வழியின்றி மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை பெற்றோரிடம் வசூலித்து வருகிறோம்.
எங்களுக்கான நிதியை அரசு விடுவித்தவுடன் பெற்றோரிடம் பெற்ற கட்டணத்தை உடனடியாகத் திரும்ப வழங்கிவிடுவோம். இந்தப் பிரச்னைக்கான தீா்வு தமிழக அரசின் கையில்தான் உள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.
Private schools put pressure on parents. Although children are entitled to free education under the Right to Compulsory Education Act, school administrations are now charging parents full fees.