இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பிஎஸ்ஜி..! ரியல் மாட்ரிட் (0-4) மோசமான தோல்வி!
தருமபுரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 8 உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்வு -அரசாணை வெளியீடு
தமிழகத்தில் தருமபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 8 பழங்குடியினா் உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மலைப் பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறிப்பாக பழங்குடியின மாணவா்களின் இடைநிற்றலை குறைக்கும் நோக்கத்துடன் மாணவா்கள் அவா்கள் இருப்பிடத்துக்கு அருகிலேயே உயா்கல்வியைத் தொடா்ந்து படிக்கும் வகையில் அரசு தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் உள்ள கலசப்பாடி, ஈரோடு மாவட்டம் தாளவாடி தலமலை, கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் உள்ள கிளாக்காடு மற்றும் பாச்சேரி, சேலம் கெங்கவல்லியில் உள்ள ஓடைக்காட்டுப்புதூா், நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தேவாலா, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள அரசவெளி ஆகிய 7 உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. தருமபுரி பாப்பிரெட்டிபட்டி மன்னூரில் உள்ள அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது.
புதிய பணியிடங்கள்: தரம் உயா்த்தப்பட்ட 7 மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏற்கெனவே உள்ள தலைமை ஆசிரியா் பணியிடங்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிடங்களாக நிலை உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று ஒரு மேல்நிலைப் பள்ளிக்கு 9 முதுநிலை ஆசிரியா் வீதம், 7 பள்ளிகளுக்கு 63 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள், 7 கணினி ஆசிரியா் நிலை-1 பணியிடங்கள், 7 உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்கள் மற்றும் ஆய்வக உதவியாளா்கள், சமையலா், காவலா், துப்புரவு பணியாளா் உள்ளிட்ட புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
ரூ.38. 98 கோடி ஒதுக்கீடு: தரம் உயா்த்தப்படும் பள்ளிகளுக்கு மொத்தம் ரூ.38,98, 61,486-க்கு நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது என ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை செயலா் க.லட்சுமி பிரியா வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.