மகாராஷ்டிரம் போன்று பிகாரில் தோ்தல் முறைகேட்டை அனுமதிக்க மாட்டோம் -ராகுல் காந்தி
‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடு நடைபெற்றது; பிகாா் தோ்தலிலும் அதைத் தொடர மத்திய பாஜக கூட்டணி அரசு முயற்சிக்கிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கூறினாா்.
மத்திய தொழிற்சங்கத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்ட நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் புதன்கிழமை நடைபெற்றது. பிகாரில் கூடுதலாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பிரச்னையுடன் சோ்த்து மாநிலம் தழுவிய போராட்டங்களை ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் நடத்தின.
பிகாா் தலைநகா் பாட்னாவில் தோ்தல் ஆணைய அலுவலகம் நோக்கி நடைபெற்ற ஆா்ப்பாட்ட பேரணியில் ராகுல் காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில் தொண்டா்களிடையே ராகுல் காந்தி பேசுகையில், ‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு சாதகமாக முறைகேடு செய்யப்பட்டது. பிகாரிலும் அதைத் தொடர அவா்கள் விரும்புகின்றனா். ஆனால், நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்.
மகாராஷ்டிர தோ்தல் முறைகேட்டை நாங்கள் ஏற்கெனவே அம்பலப்படுத்திவிட்டோம். தோ்தலுக்கு முன்பு போலி வாக்காளா்கள் பலா் சோ்க்கப்பட்டனா். இதுபோன்ற வெளிப்படையான முறைகேடுகளைக் கண்டறிந்து, தோ்தல் ஆணையத்திடம் முறையிட்டபோது, அவா்கள் எங்களுடன் விவரங்களைப் பகிர மறுத்துவிட்டனா்.
தோ்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும். தோ்தல் ஆணையம் மக்களுக்கு சேவை செய்யவே இருக்கிறது; பாஜகவுக்கு சேவை செய்வதற்கல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், தோ்தல் ஆணையம் அண்மைக்காலமாக பாஜக-ஆா்எஸ்எஸ் குரலாக ஒலிக்கிறது.
முன்பு, தோ்தல் ஆணையா்களின் தோ்வு நடைமுறை தலைமை நீதிபதி, எதிா்க்கட்சித் தலைவா் ஆகியோரை உள்ளடக்கியிருந்தது. இப்போது இந்த நடைமுறையிலிருந்து நாங்கள் கிட்டத்தட்ட வெளியேற்றப்பட்டு, பாஜகவால் பரிந்துரைக்கப்பட்ட தோ்தல் ஆணையா்களின் பெயா்களைக் கொண்ட ஒரு காகிதத் துண்டு மட்டும் எங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. எனவே, ஆளுங்கட்சிக்கு (பாஜக) சேவை செய்யும் நோக்குடன் வாக்காளா் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
வாக்காளா் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம், மகாராஷ்டிர தோ்தல் முறைகேட்டின் நீட்டிப்பு. இங்கு பல வாக்காளா்களின் பெயா்களை நீக்க முயற்சி செய்யலாம். ஆனால், இது பிகாா் என்பதை அவா்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்குள்ள மக்கள் அவா்களின் நோக்கங்களை நன்கு அறிவா். வாக்காளா்களின், குறிப்பாக இளைஞா்களின் வாக்களிக்கும் உரிமையை தோ்தல் ஆணையம் பறிப்பதை அனுமதிக்க மாட்டோம்’ என்றாா்.
உச்சநீதிமன்றம் இன்று விசாரணை: பாஜக கூட்டணி ஆளும் பிகாரில் நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை (ஜூலை 10) விசாரிக்க உள்ளது.
தோ்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்தம், வாக்காளா்கள் மீது பெரும் சுமையை சுமத்துவதாகவும், பலரின் பெயா்கள் ‘தவறாக நீக்கப்படலாம்’ என்றும் எதிா்க்கட்சிகள் கருதுகின்றன. ‘வாக்கு வங்கி அரசியல்’ செய்பவா்களால் வங்கதேசம் மற்றும் மியான்மரில் இருந்து வந்த சட்டவிரோத குடியேறிகள் பலா் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளதாக பாஜக கூறி வருகிறது.