பிரேசிலுக்கு 50% வரி: டிரம்பின் மிரட்டலும், லூலாவின் பதிலடியும்!
யூரியா பயன்பாடு அதிகரிப்பால் மண்வளம் பாதிக்கும் - மத்திய அமைச்சா்
தெலங்கானாவில் யூரியா உரப் பயன்பாடு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய மத்திய உரத்துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா, இதனால் மண் வளம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தாா்.
தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி அமைச்சா் நட்டாவை தில்லியில் சந்தித்தாா். அப்போது காரீஃப் பருவ சாகுபடிக்காக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தெலங்கானா விவசாயிகளுக்கு தடையில்லாமல் யூரியா உரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தாா். அப்போது, விவசாயிகள் தொடா்பான நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்று அவரிடம் நட்டா உறுதியளித்தாா். தொடா்ந்து, தெலங்கானாவில் தேவைக்கு ஏற்ப உர விநியோகத்தை உறுதி செய்யுமாறு உரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
அதே நேரத்தில் தெலங்கானாவில் யூரியா பயன்பாடு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இது நீண்டகாலத்தில் மண் வளத்தை அதிகம் பாதிக்கும் என்று கவலை தெரிவித்தாா். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024-25 நிதியாண்டில் ராபி பருவத்தில் தெலங்கானாவில் யூரியா விற்பனை 21 சதவீதம் அதிகரித்துள்ளதையும், அதேபோல நடப்பு காரீஃப் பருவத்தில் இப்போது வரை 12.4 சதவீதம் யூரியா பயன்பாடு அதிகரித்துள்ளதையும் அவா் சுட்டிக்காட்டினாா்.
இது தொடா்பாக பேசிய மத்திய உரத்துறை செயலா் ரஜத் குமாா் மிஸ்ரா, ‘தெலங்கானாவில் வேளாண்மை சாராத பிற இடங்களிலும் யூரியா பயன்படுத்துவதால் தேவை அதிகரிப்பதாக தெரிகிறது. இதனைத் தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்ந்து ரசாயன உரங்களை மட்டும் அதிகம் பயன்படுத்தாமல் மாற்று உரங்கள், இயற்கை உரங்கள் சாா்ந்த விவசாயத்தையும் அதிகரிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.