அமரபூண்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள அமரபூண்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அமரபூண்டியில் நடைபெற்ற இந்த முகாமை உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி தொடங்கிவைத்தாா். முகாமில் பட்டா மாறுதல், ஆதாா் அட்டை திருத்தம், மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்டவைகளுக்கு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் புதிய குடும்ப அட்டை, மகளிா் சுய உதவிக் குழுக்கடன், மருத்துவக் காப்பீட்டு அட்டை உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.
பின்னா், பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி அமைச்சா் பேசியதாவது:
தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ. ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் வரும் செப். மாதம் தொடங்கப்படும். இதன் மூலம் 45 ஊராட்சிகளில் குடிநீா்த் தேவை நிறைவடையும். இந்தத் திட்டதால் இனிவரும் 30 ஆண்டுகளுக்கு குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாது என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியா் பிரசன்னா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேதா, நளினா, மேற்கு ஒன்றியச் செயலா் தா்மராஜ், மேற்கு மாவட்ட துணைச் செயலா் ராஜாமணி, தண்டபாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.