திருப்பதி நெரிசலில் சிக்கி காயமடைந்த பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம்!
அமெரிக்காவில் காட்டுத் தீ! அண்டை வீட்டாருக்கு உதவிய கனடா பிரதமர்!
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸ் உள்பட பல பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்ட நிலையில், தீயை அணைக்கும் பணியில் கனடா தீயணைப்பு வீரர்களும் உதவி வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவிவருவதால் இன்னும் அதிக சேதம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் 19,000 ஏக்கர் நிலத்தையும், அல்டடேனா பகுதியில் 13,000 ஏக்கர் நிலத்தையும் காட்டுத்தீ எரித்துள்ளது. இந்த நிலையில், வெஸ்ட் ஹில்ஸ் பகுதியிலும் பரவிய காட்டுத்தீ சில மணிநேரங்களுக்குள் 900 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை தீக்கிரையாக்கியது.
இதற்கிடையே, அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கனடா தீயணைப்பு வீரர்களும் உதவி வருகின்றனர். கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதற்காக அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வரும்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க உதவும் ட்ரூடோ, தனது எக்ஸ் பக்கத்தில் ``அண்டை வீட்டுக்காரர்கள், அண்டை வீட்டுக்காரர்களுக்கு உதவுகிறார்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
பசிபிக் பாலிசேட்ஸ், அல்டடேனா பகுதிகளில் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கட்டடங்கள் எரிந்து சாம்பலானதுடன், அப்பகுதியில் வசிக்கும் 1,80,000 குடியிருப்பாளர்கள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட காட்டுத்தீயால், இதுவரையில் 10 பேர் பலியாகினர்; பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
கவுண்டியில் ஏற்பட்ட காட்டுத்தீயை, அணுகுண்டுக்குப் பிறகான மிகப்பெரிய பேரழிவாகக் கூறுகின்றனர். இந்தப் பகுதிகளில் ஓர் அணுகுண்டு வீசப்பட்டதுபோல் தெரிவதாகவும் கூறுகின்றனர். கலிபோர்னியாவின் வரலாற்றில் இது மிகவும் பேரழிவு தரும் தீ விபத்து என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். கடந்த எட்டு மாதங்களாக தெற்கு கலிபோர்னியாவில் அதிக மழைப்பொழிவு இல்லாதது பிரச்னையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இதையும் படிக்க:மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? 90 மணிநேர வேலையை வலியுறுத்திய எல்&டி தலைவர்!