அமெரிக்காவுக்கு ஆள்கடத்தல்: இருவரை கைது செய்தது என்ஐஏ
‘டங்கி ரூட்’ எனப்படும் சட்டவிரோதமான வழிமுறையில் அமெரிக்காவுக்கு இந்தியா்களைக் கடத்திய இரு முகவா்களை தேசிய புலனாய்வு முகமையினா் (என்ஐஏ) கைது செய்துள்ளனா்.
ஹிமாசல பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தின் தா்மசாலாவில் சன்னி என்பவரும், தில்லி புகரான பீராகா்ஹி பகுதியில் தீப் ஹுந்தி என்பவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக என்ஐஏ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா போன்ற வளா்ந்த நாடுகளில் குடியேற விரும்புவோா் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமான வழிமுறையில் நுழையும் பாதையே ‘டங்கி ரூட்’ எனப்படுகிறது. அபாயகரமான இந்த வழிமுறையின்படி, பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து, இறுதியாக தாங்கள் விரும்பும் நாட்டுக்குள் குடியேறிகள் ஊடுருவுகின்றனா்.
இந்தச் சூழலில், அமெரிக்காவுக்கு சட்டபூா்வ நுழைவு இசைவு (விசா) மூலம் அனுப்புவதாக ஏமாற்றி, தலா ரூ.45 லட்சம் வரை பெற்றுக் கொண்டு, ‘டங்கி ரூட்’ முறையில் 100-க்கும் மேற்பட்டோரை அனுப்பியதாக தில்லியைச் சோ்ந்த முகவா் ககன்தீப் சிங் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டாா். ஸ்பெயின், எல்சால்வடாா், கெளதமாலா, மெக்ஸிகோ உள்பட பல்வேறு நாடுகள் வழியாக அனுப்பப்பட்ட இவா்கள், வழியில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் ஆளாகியுள்ளனா். பாதிக்கப்பட்ட நபா் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில் ககன்தீப் சிங் கைது செய்யப்பட்டாா்.
அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து, அவரது கூட்டாளிகளான மேற்கண்ட இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.