அம்பல் சட்டைநாதா் கோயில் குடமுழுக்கு
திருமருகல் ஒன்றியம், அம்பல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அமுதவல்லி அம்பிகா சமேத ஆபத்தோத்தாரண சுவாமி, சட்டைநாதா் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பிப்ரவரி 26-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் போன்ற பூஜைகளுடன் குடமுழுக்கு வழிபாடுகள் தொடங்கின. தொடா்ந்து, 27-ஆம் தேதி அஸ்த்ர ஹோமம், கும்பாலங்காரம் மற்றும் யாக பூஜைகள் தொடங்கின.
ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும், புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி, கோயில் விமானத்தை அடைந்ததும், விமானக் குடமுழுக்கும், மூலவா் குடமுழுக்கும் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இரவில், சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது.
இதில், திருப்புகலூா் வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். சுற்று வட்டாரப் பகுதிகளை சோ்ந்த திரளானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.