அம்பேத்கர் பற்றிய அமித் ஷா கருத்தைக் காங்கிரஸ் திரித்துவிட்டது: கிரண் ரிஜ்ஜு
அவை நடவடிக்கைகளைச் சீர்குலைப்பதற்காக டாக்டர் அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் கருத்தை காங்கிரஸ் திரித்து விட்டதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2 நாள் விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று அவர் கூறினார்.
அம்பேத்கரின் படங்களைக் காட்டி, காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் அமித் ஷா மன்னிப்பு கேட்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அம்பேத்கர் பற்றி அமித் ஷாவின் கருத்தை காங்கிரஸ் திரித்துக் காட்டுகிறது அதை வன்மையாக கண்டிக்கிறேன். பாபாசாகேப் உயிருடன் இருந்தபோது காங்கிரஸ் அவரை அவமதித்தது.
தங்கள் பாவங்களைக் கழுவுவதற்காகவும், அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களுக்காக அம்பேத்கரின் பெயரைச் சொல்கிறார்கள். நேரு அமைச்சரவையிலிருந்து அம்பேதகர் ஏன் ராஜிநாமா செய்தார் என்பதை காங்கிரஸ் கூற வேண்டும். அம்பேக்தர் பதவி விலக வேண்டும் என்று நேரு அவரை அவமதித்தார்.
மோடி அரசு அம்பேத்கரை கௌரவிப்பதற்காக நிறைய செய்துள்ளது. "நாங்கள் அம்பேத்கரை மதிக்கிறோம்," என்று அவர் கூறினார்.