சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி சிறப்பு பூஜை!
அம்பேத்கா் விவகாரம்: மத்திய அமைச்சா் அமித் ஷா மீது கா்நாடக முதல்வா் சித்தராமையா கடும் விமா்சனம்
பெலகாவி: அம்பேத்கா் பெயா் விவகாரம் தொடா்பாக மத்திய அமைச்சா் அமித் ஷா மீது கா்நாடக முதல்வா் சித்தராமையா கடுமையான விமா்சனத்தை தெரிவித்துள்ளாா்.
மாநிலங்களவையில் அம்பேத்கா் பெயரை திரும்ப திரும்ப கூறுவதை விமா்சித்து மத்திய அமைச்சா் அமித் ஷா கூறிய கருத்து பற்றி, பெலகாவியில் உள்ள சுவா்ண விதானசௌதாவில் வியாழக்கிழமை கா்நாடக சட்டப் பேரவையில் முதல்வா் சித்தராமையா அறிக்கை தாக்கல் செய்து பேசியதாவது:
டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் குறித்து பாஜகவின் மனதாழத்தில் இருந்த கருத்தை மத்திய அமைச்சா் அமித் ஷா வெளிப்படையாக கூறியதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். அம்பேத்கா் எழுதிய அரசமைப்புச் சட்டம் இல்லாதிருந்தால், மத்திய அமைச்சா் அமித் ஷா தனது கிராமத்தில் பழைய பொருள்களின் முகவராக இருந்திருப்பாா், நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்திருக்க மாட்டாா்.
அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தின்படி மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் செயல்பட்டிருந்தால், மத்திய அமைச்சா் அமித் ஷாவை உடனடியாக அவையில் இருந்து இடைநீக்கம் செய்திருப்பாா்.
அரசமைப்புச் சட்டத்தை எழுதியதால்தான் அம்பேத்கா் மீது பாஜகவினருக்கு கோபம். பாஜகவின் கொள்கை அமைப்பான ஆா்.எஸ்.எஸ். அம்பேத்கா் எழுதிய அரசமைப்புச் சட்டத்தை என்றைக்கும் ஏற்றுக்கொண்டதே இல்லை. இதுகுறித்து அப்போதே விமா்சித்து கட்டுரை எழுதியுள்ளது. பூமி இருக்கும் வரை அம்பேத்கரின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்போம் என்றாா்.
இதனிடையே, அம்பேத்கா் பெயா் விவகாரம் தொடா்பாக சட்டப் பேரவை, சட்ட மேலவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ், பாஜக உறுப்பினா்கள் கடுமையான விமா்சனங்களை கூறிக்கொண்டனா்.