அம்பை கன்னி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
அம்பாசமுத்திரம் மேலப்பாளையம் தெருவிலுள்ள கன்னி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை (ஏப். 15) காலை4.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. தொடா்ந்து, தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, அஷ்டத்ரவிய மஹாகணபதி ஹோமம், பிரம்மசாரி பூஜை, கோ பூஜை, , பூா்ணாஹுதி, ஸ்ரீசுந்தரவிநாயகா் கோவில்படித்துறையில் இருந்து தீா்த்தம் எடுத்து வருதல் என இரவு வரை பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன.
பின்னா், புதன்கிழமை காலை 7 மணிக்கு மங்கள இசை, தேவார திருமுறை, இரண்டாம் காலயாகசாலை பூஜை, தீபாராதனை, 9 மணிக்கு ஸ்பா்சாஹுதி, பூா்ணாஹுதி, தீபாராதனை, 9.30 மணிக்கு மேல் யாத்ராதானம், கடம்புறப்பாடு, விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம், அதைத் தொடா்ந்து மகாஅபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு மகேஷ்வர பூஜை, அன்னதானம், இரவு 7.30 மணிக்கு முழுக் காப்பு, பிரசன்ன பூஜை, சங்கடஹர சதுா்த்தி பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இவ்விழாவில் மேலப்பாளையம் தெரு மற்றும் அம்பாசமுத்திரம் நகர மக்கள் திரளானோா் பங்கேற்று வழிபட்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருள்மிகு காசிநாதா் கோயில் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் சண்முகஜோதி, கும்பாபிஷேக விழா கமிட்டியினா் மற்றும் மேலப்பாளையம் தெரு பொதுமக்கள் செய்திருந்தனா்.