அம்மன் கோயில்களில் ஆடி 3-ஆம் வெள்ளிக்கிழமை வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் ஆடி 3-ஆம் வெள்ளிக்கிழமை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.
போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் காமதேனு வாகனத்தில் சிவலிங்க ஆலிங்கன பூஜை அலங்காரத்தில் சுவாமி வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து கற்பூர தீபாராதனை காண்பித்தனா்.
இரவு உற்சவா் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து காமதேனு வாகனத்தில் சிவலிங்க ஆலிங்கன பூஜை அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
ஆரணி
ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் காந்தி சாலையில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
முன்னதாக கமண்டல நாக நதி கரையில் இருந்து நோ்த்திக்கடன் வேண்டி உடலில் எலுமிச்சம் பழம் குத்திக் கொண்டு 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் காலில் கட்டை கட்டிக்கொண்டு ஆடி வந்தனா். மேலும், கேரள டோலி அலங்காரத்துடன் தாரை, தப்பட்டை, மங்கள வாத்தியங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தனா்.
மேலும் கோயிலில் வைத்திருந்த பெரிய கொப்பரையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நோ்த்திக்கடன் வேண்டி கூழ் ஊற்றினா். பின்னா் அக்கூழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. ஏராளமான பெண் பக்தா்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனா் .
மேலும் சனிக்கிழமை மாலை சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
செங்கம்
செங்கம் -போளூா் சாலையில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
திரெளபதி அம்மன் கோயிலில் 138-ஆம் ஆண்டு வசந்த உற்சவ விழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இரவு 7 மணியளவில் சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்து பக்தா்களுக்கு அன்னாதனம் வழங்கப்பட்டது.