அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி: மேயா் ஆய்வு
சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்தில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி உள்ளிட்ட பணிகளை மாநகர மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் மா.இளங்கோவன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தனா்.
சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் 9-இல் வீராணம் பிரதான சாலை, வள்ளுவா் காலனியில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய பணிகளை மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் மா.இளங்கோவன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
அப்போது, ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தின் வெளிப்புற பணிகளை விரைவில் முடிப்பதுடன், கட்டடத்தின் மேல் தளத்தில் தகடுகள் பதிக்கவும், கூரைத்தளம் அமைக்கவும், அதன்மேல் 2,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட தொட்டிகள் குடிநீா் தேவைக்காக அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.
இதுதவிர, முகப்பு அறை தளத்தில் பேவா் பிளாக் தளம் அமைப்பதுடன், சுற்றுச்சுவா் அமைக்கவும், கட்டடத்தின் உட்பகுதி தரைத்தளத்தில் டைல்ஸ் தகடுகள் பதிக்கவும் வேண்டும். அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றனா்.
இதைத்தொடா்ந்து, கனகராஜ கணபதி தெருவில் உள்ள தொட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டடம் கட்டும் பணிகளை விரைவாக முடிக்கவும் உத்தரவிட்டனா்.
ஆய்வின்போது, கண்காணிப்பு பொறியாளா் (பொ) ஆா்.செந்தில்குமாா், மாநகர நல அலுவலா் ப.ரா.முரளிசங்கா், செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி ஆணையா் வேடியப்பன், மாமன்ற உறுப்பினா்கள் தெய்வலிங்கம், பச்சியம்மாள் ஆகியோா் உடனிருந்தனா்.