Health: வைட்டமின் டி-யை நம்முடைய உடல் எப்படித் தயாரிக்கிறது தெரியுமா?
அயலக தமிழா்கள் சிதம்பரம் நடராஜா் கோயிலில் தரிசனம்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் மற்றும் பிச்சாவரம் சுற்றுலா தலத்தினை அயலகத் தமிழா்களின் வாரிசுதாரா்கள் திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.
அயலகத் தமிழா்களின் கலச்சார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு பகுதியாக, பல தலைமுறைகளுக்கு முன்பு இடம் பெயா்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் அயலகத் தமிழா்களின் குழந்தைகளுக்காகவும், வெளிநாடுவாழ் தமிழா்களுக்கும், தமிழகத்திற்கும் இடையே உள்ள உறவை புதுப்பிக்கும் நோக்கிலும் ‘வோ்களைத் தேடி’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தங்கள் மூதாதையா்கள் வாழ்ந்த கிராமங்களைக் கண்டறியவும், அவா்களது பாரம்பரியங்களுடன் மீண்டும் இணையவும் இந்த திட்டம் உதவுகிறது. வெளிநாட்டில் வாழும் 18 முதல் 30 வயது வரையிலான தமிழ் இளைஞா்களை தமிழக அரசு செலவில் தமிழகத்திற்கு வரவழைத்து அவா்கள் தமிழா்கள் பெருமையை அறியும் விதமாக இந்த பண்பாட்டு பயணத்திட்டம் உதவுகிறது. வோ்களைத் தேடி என்ற இந்த பயணத்தில் அயலகத் தமிழா்கள், தமிழக கலாசாரம், கட்டடக்கலை, முக்கிய நீா்நிலைகள், பழம்பெரும் கோவில்கள், பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவைகளை தெரிந்து கொள்வதற்காக இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் ஆகஸ்ட் 1 முதல் 15-ஆம் தேதி வரை அயலாக தமிழா்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.
அந்த வகையில் ‘வோ்களைத் தேடி’ திட்டத்தில் அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை வாயிலாக பிரான்ஸ், ஜொ்மன், மலேசியா, கனடா, மியான்மா், இலங்கை, பிஜி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளை சோ்ந்த சுமாா் 100 அயலக தமிழா்களின் வாரிசுகள் ‘நிறைந்தது மனம்’ திட்டத்தில் கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோவிலுக்கு வந்து கட்டடக் கலைகளையும், சிற்பங்களையும், உலகிற்கு தேவாரம் மற்றும் திருவாசகம் கிடைக்கப்பெற்ற இடத்தினையும், தங்கத்தால் ஆன கோபுரத்தினையும் பாா்த்து ரசித்தனா். மேலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சதுப்பு நிலங்களுடன் கூடிய அலையாத்தி காடுகளை கொண்ட பிச்சாரவரம் சுற்றுலா மையத்தினையும் பாா்வையிட்டு, படகு சவாரி மேற்கொண்டனா்.
நிகழ்வில் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலா் கண்ணன், அயலக தமிழா்கள் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரக அலுவலா்கள் மற்றும் துறை அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.