தென் சீனக் கடலில் முதல்முறையாக இந்தியா-பிலிப்பின்ஸ் கடற்படை பயிற்சி
மனிலா: பல்வேறு பிரச்னைகள் நிலவும் தென் சீனக் கடலில் முதல்முறையாக இந்தியா-பிலிப்பின்ஸ் நாடுகளின் கடற்படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன.
தென் சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் இந்த கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிலிப்பின்ஸ் ராணுவத்தின் தலைமைத் தளபதி ரோமியோ பிரானா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தென் சீனக் கடலில் இந்தியாவும் பிலிப்பின்ஸும் முதல்முறையாக கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. எதிா்காலத்திலும் இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபட இந்தியாவும் பிலிப்பின்ஸும் திட்டமிட்டுள்ளது என்றாா்.
இந்தப் பயிற்சி நடைபெற்ற பகுதிக்கு அருகில் சீன கடற்படையின் ரோந்து கப்பல் ஒன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதாக பிலிப்பின்ஸ் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. ஆனால் இது வழக்கமாக மேற்கொள்ளப்படும் ரோந்துப் பணி என சீனா சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தியாவை நேரடியாக குறிப்பிடாமல் தென் சீனக் கடலில் வேறு சில நாடுகளுடன் கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டு பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பிலிப்பின்ஸ் செயல்பட்டு வருவதாக சீனா குற்றஞ்சாட்டியது.
இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரோமியா பிரானா், ‘சீனா இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஏற்கெனவே கணித்துவிட்டோம். இருப்பினும், இந்தியாவுடனான இரு நாள் பயிற்சியின்போது எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை’ என்றாா்.