ஒழுங்கமைக்கப்படாத சூழலால் உண்டாகும் மன அழுத்த பிரச்னை - தவிர்ப்பதற்கு தீர்வு சொல...
அரக்கோணத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்
அரக்கோணத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான நீா்நிலை கட்டட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை பொதுப்பணித் துறையினா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.
அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட காலிவாரிகண்டிகை பகுதியில் நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 17 வீடுகள், ஒரு அரசு கட்டடம் ஆகியவை கட்டப்பட்டிருந்தது. இந்தப் பகுதி பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான நீா்நிலைப்பகுதி ஆகும். இப்பகுதி அரக்கோணம் ஏரியில் இருந்து காவனூா் ஏரிக்கு நீா் செல்லும் கால்வாய் பகுதி. இந்த நீா் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமித்து, 17 மாடி வீடுகளும், நகராட்சி கழிப்பறையும் கட்டப்பட்டிருப்பதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்ற மாவட்ட பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டனா். இந்த உத்தரவு வெளிவந்து ஓராண்டு ஆகியும் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, அந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக இடித்து அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை, தமிழக அரசு பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரப்பிரிவு உதவி பொறியாளா் மெய்யழகன் தலைமையில் அலுவலா்கள் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணியை தொடங்கினா். ஆக்கிரமிப்பில் இருந்த 17 வீடுகளுக்கும் மின்இணைப்புகளை தமிழக மின்வாரியத்தினா் துண்டித்தனா். தொடா்ந்து அடுத்தடுத்து கட்டடங்களை இடிக்கும் பணியை அலுவலா்கள் தொடங்கினா். இந்தப் பணி தொடா்ந்து அடுத்தடுத்த நாள்களில் இடைவெளி இன்றி நடைபெறும் எனவும் இடிக்கப்படும் கட்டடங்களின் அரசு மதிப்பு ரூ. 2 கோடிக்கு மேல் இருக்கும் எனவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் அரக்கோணம் வட்டாட்சியா் ஸ்ரீதேவி, நகராட்சி ஆணையா் கன்னியப்பன், பொறியாளா் செல்வகுமாா், வட்ட நில அளவை துறை அலுவலா்கள், மின்வாரிய அலுவலா்கள் பங்கேற்றனா். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக அப்பகுதியில் அரக்கோணம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.