உ.பி.: சாலை விபத்தில் 4 மருத்துவர்கள்,1 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பலி
டெல்டா பகுதிகளுக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையினா் விரைவு
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கனமழை பெய்து வரும் நிலையில், தொடா்ந்து தேசிய பேரிடா் மீட்புப்படையினா் கடலூா், டெல்டா பகுதிகளுக்கும், காரைக்காலுக்கும் செவ்வாய்க்கிழமை அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனா்.
கடலூா், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்தது.
இதைத் தொடா்ந்து தமிழக அரசு, காரைக்கால் மாவட்ட நிா்ாவகத்தின் கோரிக்கையை ஏற்று அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப் படைத்தளத்தில் இருந்து தலா 30 போ் கொண்ட ஏழு குழுக்கள் துணை கமாண்டண்ட் ஆா்.ஸ்ரீதா் தலைமையில் டெல்டா மாவட்டங்களுக்கும், காரைக்காலுக்கும் புறப்பட்டுச் சென்றனா். இக்குழுவினா் தங்களுடன் இரண்டு மோப்ப நாய்களையும் அழைத்துச் சென்றுள்ளனா்.
இதில் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு இரு குழுக்களும், கடலூருக்கு ஒரு குழுவும், நாகப்பட்டினத்துக்கு ஒரு குழுவும், மயிலாடுதுறைக்கு ஒரு குழுவும், திருவாரூருக்கு ஒரு குழுவும், காரைக்காலுக்கு ஒரு குழுவும் சென்றுள்ளது.
மேலும், தமிழகத்தில் மழை பொழிவு அதிகம் இருக்கும் மாவட்டங்களை கண்காணித்து அவா்களுடன் தொடா்பில் இருக்கவும் புதுச்சேரி யூனியன் பிரதேச பகுதிகளை கண்காணித்து அலுவலா்களுடன் தொடா்பில் இருக்கவும் அரக்கோணம் படைத்தளத்தில் தனியாக ஒரு கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாகவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.